பயங்கரவாதம்: ஐநா சபையில் பாகிஸ்தானை சல்லி சல்லியாக நொறுக்கிய காஷ்மீர் ஆர்வலர்
செவ்வாயன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் 54வது அமர்வில், ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் பாகிஸ்தானை ஒரு காஷ்மீரி சமூக-அரசியல் ஆர்வலர் கடுமையாக சாடினார். ஸ்ரீநகரைச் சேர்ந்த தஸ்லீமா அக்தர், பல காலமாக தான் சமூக ஆர்வலராக பணியாற்றி வருவதாகவும், பள்ளத்தாக்கில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள் மீது நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்களின் சொல்லப்படாத கதைகளை ஆராய்ந்து வருவதாகவும் கவுன்சிலில் தெரிவித்தார். "துரதிர்ஷ்டவசமாக, எனது குழந்தைப் பருவத்திலிருந்தே, பாகிஸ்தானால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்தால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நான் கண்டிருக்கிறேன். இந்த பயங்கரவாதிகளால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் தாங்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர். " என்று தஸ்லீமா உருக்கமாக உரையாற்றினார்.
ஐநா கூட்டத்தில் மேலும் தஸ்லீமா அக்தர் கூறியதாவது:
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி கேட்கும் காரணத்திற்காகவே நான் என் இலக்கை நோக்கி உழைக்க தொடங்கினேன். ஜம்மு காஷ்மீரில் ஏராளமான பொதுமக்கள் பல தசாப்தங்களாக தொடரும் பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். பயங்கரவாதச் செயல்கள் மற்றும் படுகொலைகள் பற்றிய அச்சம் நிறைந்த கதைகளை நான் கண்டிருக்கிறேன். அதிர்ச்சியூட்டும் வகையில், இந்தக் கதைகளில் பெரும்பாலானவை வெளியுலகுக்குத் தெரியாது. பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களை நான் சந்தித்திருக்கிறேன். காஷ்மீரில் அனாதைகள், ஆதரவற்றோர், விதவைகள் மற்றும் நலிவடைந்த முதியோர்கள் ஆகியோருக்கு வீட்டில் உணவளிக்கக்கூட ஆளில்லை. பாகிஸ்தான் பயங்கரவாதத்தால் காஷ்மீர் மக்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும் தொடர்ந்து எவ்வளவு துன்பப்படுகிறார்கள் என்பதையும் உலகம் அறிய வேண்டும். இதுபோன்ற மனிதாபிமானமற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.