சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய தாலிபான் விருப்பம்
சீன அதிபரின் ஜி ஜின்பிங்கின் கனவு திட்டமான பெல்ட் அண்ட் ரோடு இனிஷியடிவ் திட்டத்தில் இணைய, ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். சீனாவை ஐரோப்ப கண்டத்துடன் தரை வழியாக இணைக்கவும், ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டங்களில் உள்ள முக்கியமான துறைமுகங்களை இணைக்கவும் இத்திட்டம் 2013 ஆம் ஆண்டு அதிபர் ஜியால் தொடங்கப்பட்டது. தற்போது சீனாவில் இத்திட்டத்தின் பத்தாவது ஆண்டு விழாவை முன்னிட்டு உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் ரஷ்ய அதிபர் புதின், ஹங்கேரிய பிரதமர் விக்டர் ஓர்பன் மற்றும் தாலிபான்கள் உள்ளிட்ட 130 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
திட்டம் குறித்து அறிய சீனாவுக்கு சிறப்பு குழு அனுப்பும் தாலிபன்கள்
உச்சி மாநாட்டில் பங்கேற்க பெய்ஜிங் சென்றுள்ள தாலிபன் வர்த்தக அமைச்சர் ஹாஜி நூருதீன் அஜீஸி, "நாங்கள் பெல்ட் அண்ட் ரோடு இனிசியடிவ் திட்டத்தில் சேர சீனாவிடம் விருப்பம் தெரிவித்துள்ளோம். இது தொடர்பான தொழில்நுட்ப பேச்சு வார்த்தைகள் நடத்தப்படும் என தெரிவித்தார்." இத்திட்டத்தின் முதன்மையான திட்டமான 'பாகிஸ்தான் காரிடோர்' திட்டத்தில் இணையவும் ஆப்கானிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இத்திட்டம் குறித்து முழுமையாக அறிந்து கொள்ள, ஆப்கானிஸ்தான் ஒரு தொழில்நுட்ப குழுவை சீனாவுக்கு அனுப்பும் எனவும் வர்த்தக அமைச்சர் தெரிவித்தார்.
தாலிபான்களுடன் தொடர்ந்து நட்பு பாராட்டி வரும் சீனா
கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்டில் ஆப்கானிஸ்தானை, தாலிபான்கள் கையகப்படுத்தியது முதல் சீனா தாலிபான்களுடன் மிகுந்த நட்பு பாராட்டி வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு அனைத்து நாடுகளும் தங்கள் தூதர்களை திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில், சீனா முதல் நாடாக ஆப்கானிஸ்தானுக்கு தூதர்களை நியமித்தது குறிப்பிடத்தக்கது. தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஆப்கானிஸ்தானுக்கு, சீனாவின் ஆதரவும், சீனாவில் இருந்து வரும் முதலீடுகளும் முக்கியமானது. "உலகம் முழுவதும் முதலீடுகளைச் செய்யும் சீனா, ஆப்கானிஸ்தானிலும் முதலீடுகள் செய்ய வேண்டும். எங்களிடம் அவர்களுக்கு தேவையான லித்தியம், தாமிரம் மற்றும் இரும்பு என அனைத்தும் உள்ளது." "முதலீடுகளைப் பெற ஆப்கானிஸ்தான் எப்போதும் இல்லாத அளவுக்கு தயாராக உள்ளது" என அஜீஸி தெரிவித்தார்.