ரஷ்யர்களின் நீண்ட கால விசாவை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை தீர்மானம்
உக்ரைன் போர் காரணமாக, காலாவதியான நீட்டிக்கப்பட்ட விசாவில் இலங்கையில் வசிக்கும் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்களை இரண்டு வாரங்களுக்குள் வெளியேறுமாறு இலங்கை கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரஷ்யர்களால் நடத்தப்படும் வணிகங்கள் சட்டவிரோதமாக இயங்குவது மற்றும் உள்ளூர் மக்களை அனுமதிக்காத "வெள்ளையர்கள் மட்டும்" கொள்கையுடன் செயல்படுவது குறித்து சமூக ஊடகங்களில் சர்ச்சை எழுந்ததை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ரஷ்ய மற்றும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகள் பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கி, இரண்டு வாரங்களுக்குள் இலங்கை நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இலங்கையின் சுற்றுலா அமைச்சரவைக்கு, குடிவரவு அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் மேற்கோள்காட்டி செய்தி நிறுவனமான PTI செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அமைச்சரவை தெரிவித்தது என்ன?
ரஷ்யர்கள் மற்றும் உக்ரேனியர்கள் இலங்கையில் நீண்ட காலம் தங்கி, தங்களுடைய உணவகங்கள் மற்றும் இரவு விடுதிகளை அமைத்தல், வெளிநாட்டினரை பணியமர்த்துதல், உள்ளூர் அமைப்புகளைத் தவிர்த்தல் போன்ற புகார்கள் கிடைத்துள்ளதாக இலங்கை சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, டெய்லி மிரருக்குத் தெரிவித்ததாவது, "நாட்டின் தெற்குப் பகுதியில் சில ரஷ்யர்கள் சட்டவிரோத வியாபாரங்களை நடத்துவதாக அமைச்சரவைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன". எவ்வாறாயினும், அமைச்சரவையின் ஒப்புதலின்றி உக்ரேனியர்களையும், ரஷ்யர்களையும் வெளியேறுமாறு கூறிய தீர்மானம் குறித்து விசாரணை நடத்துமாறு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளது. எனினும், உக்ரைன் மற்றும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்பட்ட நீடித்த விசாவை ரத்து செய்த உத்தரவை திரும்ப பெறும் எண்ணமும் இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.