சிங்கப்பூரில் வீடு வாங்குவதை விட கார் வாங்குவது காஸ்ட்லி!- ஏன் தெரியுமா?
பரப்பளவில் சிறிய நாடான சிங்கப்பூர் அந்நாட்டு மக்கள் கார் வாங்குவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. சிங்கப்பூர் மக்கள் கார் வாங்குவதற்கு "சர்டிபிகேட் ஆப் என்டைட்டில்மென்ட்" (சிஓஇ) என்ற சான்றிதழ் வாங்க வேண்டும். இந்த சான்றிதழ் 10 வருடம் மட்டுமே செல்லுபடி ஆகும். கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள இந்த விதியின் மூலம் சிறிய நாட்டில் கார்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும் என அந்நாட்டு அரசு கூறுகிறது. இதன்படி சிங்கப்பூரில் கார் வாங்க விரும்பும் ஒருவருக்கு, இந்த சான்றிதழ் ஒதுக்கீடு ஏல முறை மூலம் வழங்கப்படுகிறது. தற்போது இந்த சான்றிதழ் வாங்க $106,000 அமெரிக்க டாலர்கள் செலவாகிறது. இது இந்திய மதிப்பில் தோராயமாக ₹82 லட்சம் ஆகும்.
உலகிலேயே கார் வாங்க விலை உயர்ந்த நகரம் சிங்கப்பூர்
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சிஓஇ வாங்குவதற்கான கட்டணம் நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் இது தவிர வாகன உரிமையாளர் வாகனத்திற்கான பதிவு கட்டணம், வரிகள் உள்ளிட்டவற்றையும் செலுத்த வேண்டும். கொரோனா காலத்திற்கு முன் குறைக்கப்பட்ட சிஓஇ தொகை, கொரோனா காலத்திற்கு பின் பொருளாதார வளர்ச்சியால் கார் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகமானதை தொடர்ந்து உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி அமெரிக்காவில் ₹28 லட்சத்திற்கு விற்பனையாகும் டொயோட்டா கேம்ரி ஹைபிரிட் காரை சிங்கப்பூரில் வாங்க ₹1.52 கோடி செலவு செய்ய வேண்டும். அதே சமயம் சிங்கப்பூரில் அரசு மானியத்துடன் உங்களால் ₹75 லட்சத்திற்கு ஒரு வீடு வாங்க முடியும். இது உலகிலேயே சிங்கப்பூரை, கார் வாங்க விலை உயர்ந்த நகரமாக்கி உள்ளது.