டிசம்பர் 1ஆம் தேதி, ஏர் இந்தியா விமானங்களை தவிர்க்குமாறு மீண்டும் SFJ அறிக்கை
காலிஸ்தான் அமைப்பான SFJ-இன் பொதுச்செயலர் குர்பத்வந்த் பண்ணுன், வரும் டிசம்பர் 1ஆம் தேதி, கனடிய விமான நிலையங்களில் இருந்து புறப்படும் அனைத்து ஏர் இந்தியா விமானங்களையும் புறக்கணிக்குமாறு அறிக்கை வெளியிட்டுள்ளார். டிசம்பர் 1ம் தேதி டொராண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள கனேடிய விமான நிலையங்களில் இருந்து ஏர் இந்தியாவின் வெளியூர் செல்லும் விமானங்களை "புறக்கணிப்பு" செய்யுமாறு காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு, நவம்பர் 20 அன்று இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் தேசிய புலனாய்வு அமைப்பு (NIA), பண்ணுனுக்கும், அவரது பிரிவினைவாத அமைப்புக்கும் எதிராக குற்றச்சாட்டுகளை பதிவு செய்த உடனேயே வந்தது குறிப்பிடத்தக்கது.
"சீக்கியர்களின் உயிர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது"
"பண்ணுனின் இந்த தொடர் அச்சுறுத்தல்களால், கனடா, இந்தியா மற்றும் ஏர் இந்தியா பறக்கும் பிற நாடுகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது" என்று NIA கூறியது. நேற்று, செவ்வாய்கிழமை மாலை, ஏர் இந்தியாவிற்கு எதிரான "புறக்கணிப்பு" அழைப்பை மீண்டும் வெளியிட்ட பண்ணுன்,"ஏர் இந்தியாவின் செயல்பாடு, சீக்கியர்களின் உயிர்களுக்கு தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளது" என்று கூறினார். இருப்பினும், SFJஇன் இந்த அச்சுறுத்தல், ஏர் இந்தியாவின் முன்பதிவுகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று செய்திகள் கூறுகின்றன. முன்னதாக, நவம்பர் 19 அன்று கிரிக்கெட் உலகக்கோப்பையை சீர்குலைக்க திட்டமிட்டுள்ளதாகவும், அந்நாளில் சீக்கியர்கள் யாரும் ஏர் இந்தியா விமானத்தில் பறக்க வேண்டாம் எனவும் பண்ணூன் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விஷயத்தை கனடா காவல்துறை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் விசாரித்து வருகிறது.