ரஷ்ய-உக்ரைன் போர்: சவுதி அரேபியாவில் நடக்க இருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை
அடுத்த மாதம், சவூதி அரேபியா, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக அமைதிப் பேச்சுக்களை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேற்கத்திய நாடுகள், இந்தியா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பெரிய வளரும் நாடுகளை இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்க உக்ரைன் திட்டமிட்டுள்ளது. இதற்காக, அடுத்த வாரம் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்(ஆகஸ்ட் 5-6) சுமார் 30 நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் ஜெட்டாவுக்கு பயணம் செய்யவுள்ளனர். சவூதியில் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ளாது என்ற தகவல் வெளியாகி இருக்கும் நிலையில், சீனாவும் இதில் கலந்து கொள்ளாது என்றே கூறப்படுகிறது. இந்த உச்சிமாநாட்டிற்கு இந்தியா, பிரேசில்,மெக்சிகோ, எகிப்து, இந்தோனேசியா, சிலி மற்றும் ஜாம்பியா போன்ற நாடுகளை உக்ரைன் மற்றும் சவுதி அரேபியா அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை': ரஷ்ய அதிபர்
மறுபுறம், யுனைடெட் கிங்டம்(யுகே), போலந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம்(EU) போன்ற சில நாடுகள் அடுத்த மாதம் ஜெட்டாவில் நடைபெறும் உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள இருப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. உக்ரைன் ஜனாதிபதி கடந்த மே மாதம் ஜெட்டாவில் நடைபெற்ற அரபு லீக் உச்சிமாநாட்டில் பங்கேற்று, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனை ஆதரிக்குமாறு அரபு நாடுகளுக்கு அழுத்தம் கொடுத்தார். இது நடந்து சில மாதங்களுக்குள், சவூதி அரேபியா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், அமைதிப் பேச்சுவார்த்தைகளை நிராகரிக்கவில்லை என்றும், உக்ரைன் தாக்குதல் நடத்தும் போது எங்களால் அமைதியாக இருக்க முடியாது என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் நேற்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.