ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் டேங்கர்களை தாக்கிய உக்ரைன்: பதிலடி கொடுக்க ரஷ்யா முடிவு
கடந்த வெள்ளிக்கிழமை, கிரிமியாவிற்கு அருகிலுள்ள கருங்கடலில் இருக்கும் ரஷ்ய எண்ணெய் டேங்கர்களை உக்ரேனிய ட்ரோன்கள் தாக்கியது. ஒரே நாளில் ஆளில்லா விமானத்தால் நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவாகும். இதனையடுத்து, இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை ரஷ்யாவின் முக்கிய துறைமுகத்தை உக்ரைன் தாக்கியது. அதே நாளின் பிற்பகுதியில் ரஷ்யாவின் எண்ணெய் டேங்கர்கள் தாக்கப்பட்டது. கெர்ச் ஜலசந்தியில் ஒரு சிவிலியன் கப்பலின் மீது உக்ரைன் நடத்தியது ஒரு "பயங்கரவாத தாக்குதல்" என்று கூறிய ரஷ்யா அரசாங்கம், அதை கடுமையாக கண்டித்துள்ளது என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா கூறியுள்ளார்.
உக்ரேனிய துறைமுகங்கள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதல்
"இதுபோன்ற காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு எந்த நியாயமும் இருக்க முடியாது. இதை செய்த குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்" என்று அவர் டெலிகிராமில் தெரிவித்துள்ளார். உக்ரைனின் கடற்படை திறன்கள் வளர்ந்து வரும் நிலையில், ரஷ்யா-உக்ரைன் போரின் முக்கியமான போர்க்களமாக கருங்கடல் மாறி வருகிறது. மூன்று வாரங்களுக்கு முன்பு, ரஷ்யா ஒரு முக்கிய ஏற்றுமதி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது. அந்த ஒப்பந்தம், மில்லியன் கணக்கான டன் தானியங்களை கருங்கடல் வழியாக உலக சந்தைகளில் விற்பனை செய்ய உக்ரைனை அனுமதித்தது. அந்த ஒப்பந்தம் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, சில முக்கிய உக்ரேனிய துறைமுகங்கள் மீது ரஷ்யா மீண்டும் மீண்டும் தாக்குதல்களை நடத்தியது.