சுற்றுலாவாசிகளை ஈர்க்க ரஷ்யாவின் புதிய திட்டம்; 2025ல் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை!
ரஷ்ய அரசின் புதிய முடிவின்படி, 2025ம் ஆண்டில் இந்தியர்கள் ரஷ்யாவுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். கல்வி, தொழில் மற்றும் சுற்றுலா போன்ற பல்வேறு காரணங்களுக்காக இந்தியர்கள் ஆண்டுதோறும் ரஷ்யா செல்கின்றனர். அதிக எண்ணிக்கையிலான இந்தியர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மாஸ்கோ நகர சுற்றுலா நிர்வாக குழு தலைவர் எவ்ஜெனி கோஸ்லோவ் கூறும் போது, "இந்தியர்களுக்கு விசா இல்லாமல் ரஷ்யா வருவதற்கு அனுமதிக்கும் ஒப்பந்தம் தயாராகி வருகிறது. விரைவில் இது அமலுக்கு வரும்," என்றார். இரு நாடுகளுக்கிடையிலான உறவுகள் காரணமாக இந்தியா, ரஷ்யா யின் முக்கிய சுற்றுலா சந்தையாக மாறியுள்ளது.
சுற்றுலாவை அதிகரிக்க ரஷ்யாவின் மாஸ்டர் பிளான்
இந்த நடைமுறை அமலுக்கு வந்தால், இந்தியாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் 28,500 இந்திய பயணிகள் மாஸ்கோவை விசிட் செய்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 1.5 மடங்கு அதிகம். முந்தைய ஆண்டுகளில், இந்தியர்களுக்கு இ-விசா வழங்கப்படுவது வழக்கம். அதோடு விசா பிராஸிங் நாட்களும் குறைக்கப்பட்டு 4 நாட்களில் கிடைப்பது போல சுலபமாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 9,500 இ-விசாக்கள் வழங்கப்பட்டன. இந்த புதிய மாற்றம், இந்தியர்களுக்கான பயணத்தை மேலும் எளிமைப்படுத்தும் என நம்பப்படுகிறது.