
"இந்தியா-ரஷ்யா உறவை முறிக்கும் முயற்சி தோல்வியடையும்": டிரம்ப் முயற்சிக்கு ரஷ்யா கடும் பதிலடி
செய்தி முன்னோட்டம்
இந்தியா மற்றும் ரஷ்யா இடையிலான உறவைப் பாதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியடையாது என ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்கா, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை தொடர்ந்து இந்தியா மீது அதிருப்தியை வெளிப்படுத்தி, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு 50% வரி விதித்தது. இது இந்திய ஏற்றுமதியாளர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை இந்தியா கடுமையாக கண்டித்த நிலையில், டிரம்ப் இந்தியா-ரஷ்யா உறவுகளை பாதிக்க மேலும் முனைப்பைக் காட்டி வருகிறார்.
அறிக்கை
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை
இந்நிலையில், ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "ரஷ்யா-இந்தியா இடையேயான உறவுகளை பாதிக்க மேற்கொள்ளப்படும் எந்த முயற்சியும் தோல்வியடையும். அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பின் அழுத்தங்கள் இருந்தும், இந்தியா தனது சுதந்திரமான, உறுதியான நிலைப்பாட்டை நிலைநாட்டி வருகிறது. இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான உறவுகள் பல தளங்களில் வேரூன்றியவை. இரு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நட்பு, கலாசார ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை நிலவுகிறது. இவ்வாறான உறவை முறிக்க எவரும் முடியாது," எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், "தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் இந்திய அணுகுமுறையை ரஷ்யா பாராட்டுகிறது," என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.