போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்த கத்தார், போர் நிறுத்த பேச்சு வார்த்தைகள் நடைபெறுவதாக தகவல்
இஸ்ரேல் ஹமாசிடையே போர் மீண்டும் தொடங்கியதற்கு வருத்தம் தெரிவித்துள்ள கத்தார், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்பட பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில், "மனிதாபிமான போர் இடைநிறுத்தத்திற்கு வழிவகுத்த முயற்சிகளைத் தொடர்வதாக" குறிப்பிட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தம் முடிந்த உடனே காசா பகுதியில் தொடங்கிய தாக்குதல்கள், "மத்தியஸ்த முயற்சிகளை சிக்கலாக்குகிறது மற்றும் மனிதாபிமான பேரழிவை அதிகப்படுத்துகிறது" என கூறியுள்ளது. போரில் பொதுமக்கள் தாக்கப்படுவதற்கு, அந்நாடு அதன் அறிக்கையில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
போர் தொடங்கிய சில மணி நேரத்தில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்
அக்டோபர் 7ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த இஸ்ரேல் ஹமாஸ் போரில், கடந்த வெள்ளிக்கிழமை போர் நிறுத்தம் தொடங்கியது. ஏழு நாட்கள் நீடித்த இப்போர் நிறுத்த ஒப்பந்தம் நீட்டிக்கப்படாததை தொடர்ந்து, இன்று காலை முடிவுக்கு வந்தது. இன்று காலை ஹமாஸ், இஸ்ரேல் படைகள் மீது தாக்குதல் நடத்தியதால், போர் நிறுத்தம் முடிவுக்கு வருவதாக இஸ்ரேல் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. காசா மீது மீண்டும் தாக்குதலை தொடங்கிய இஸ்ரேல், மக்கள் வெளியேறுவதற்கான பாதுகாப்பாக வழிகள் குறித்த, துண்டு பிரசுரங்களை வான் வழியாக வீசியது. அதில், காசா பகுதியின் வரைபடத்துடன் இணைக்கும், QR குறியீட்டை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. போர் தொடங்கிய சில மணி நேரங்களில், இஸ்ரேல் தாக்குதலில் 30 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக, ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.