சீனாவில் டிரம்ப் - ஜி ஜின்பிங்கை சந்திக்க வந்த புடின் கையில் அணு ஆயுத சூட்கேஸ்?
செய்தி முன்னோட்டம்
சீனாவின் ஷென்சென் நகரில் நடைபெறும் APEC உச்சி மாநாடு மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடனான முத்தரப்பு சந்திப்பிற்காக சென்றுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன், ரஷ்யாவின் 'அணு ஆயுத சூட்கேஸ்' கொண்டு செல்லப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி உலக அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. ரஷ்ய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 'Russia-1' தொலைக்காட்சி சேனல் இந்த அரிய காட்சிகளை ஒளிபரப்பியுள்ளது.
வைரலாகும் வீடியோ
"இது அணு ஆயுதப் பெட்டியா?"
மாநாட்டு வளாகத்தில் புடினுக்கு பின்னால் ரஷ்ய கடற்படை அதிகாரி ஒருவர் கருப்பு நிற சூட்கேஸ் ஒன்றை சுமந்து செல்லும் காட்சி 'ரஷ்யா-1' தொலைக்காட்சியில் வெளியானது.
அப்போது அந்த சேனலின் செய்தியாளர் யெவ்ஜெனி போபோவ் அந்த அதிகாரியிடம் நேரடியாக கேள்வி எழுப்பினார்:
செய்தியாளர்: "வணக்கம், இதுதான் அணு ஆயுதத் தாக்குதலுக்கு உத்தரவிடக்கூடிய அந்த அணு ஆயுத சூட்கேஸா?"
கடற்படை அதிகாரி: "ஆம்"
செய்தியாளர்: "அந்தக் குறிப்பிட்ட பெட்டிதானா?"
கடற்படை அதிகாரி: "அதே பெட்டிதான்" எனப் பதிலளித்துள்ளார்.
அணு ஆயுதக் கட்டுப்பாடு குறித்து டொனால்ட் டிரம்ப் பேச விரும்பும் நிலையில், புடினுடன் இந்த பெட்டி கேமராவில் படம்பிடிக்கப்பட்டிருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது.
முக்கியத் தகவல்கள்
என்ன இந்த Cheget அணு ஆயுத சூட்கேஸ்?
ரஷ்யாவின் இந்த அணு ஆயுதப் பெட்டி 'செகட்' என்று அழைக்கப்படுகிறது.
1980-களில் மிகைல் கோர்பச்சேவ் ஆட்சிக் காலத்தில் இது அறிமுகப்படுத்தப்பட்டது.
இது நேரடியாக ஏவுகணைகளை ஏவும் பொத்தான் அல்ல; ரஷ்ய அதிபருக்கும் அந்நாட்டின் அணு ஆயுத ராணுவத் தலைமைக்கும் இடையே பாதுகாப்பான தகவல் தொடர்பை ஏற்படுத்தும் அதிநவீன சாதனமாகும்.
ஷ்ய அதிபர் புடினைத் தவிர, ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் மற்றும் ராணுவத் தலைமைத் தளபதி ஆகிய இருவரிடமும் இதேபோன்ற தலா ஒரு பெட்டி உள்ளது.
ரஷ்ய கடற்படை சீருடை அணிந்த அதிகாரிகள் எந்நேரமும் புடினுடன் இதனை எடுத்துச் செல்வார்கள்; ஆனால் இது பொதுவெளியில் கேமராவில் சிக்குவது மிகவும் அரிது.
சர்வீஸ் K
ரகசியப் பிரிவான Service 'K' அதிகாரிகள்
சுயாதீன ரஷ்யப் புலனாய்வு ஊடகமான தி டோசியர் சென்டர் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்த அணு ஆயுத சூட்கேஸ்களை உள்நாட்டில் Service K என அழைக்கப்படும் மூலோபாயத் தகவல் தொடர்புகளுக்கான சிறப்புப் பிரிவு அதிகாரிகள் கையாள்கின்றனர்.
2021 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் குறைந்தது 53 பேர் இந்த ரகசியப் பிரிவில் பணியாற்றியுள்ளனர்.
மிக முக்கியமான இந்தப் பணியில் இருந்தபோதிலும், இந்த அதிகாரிகளில் பெரும்பாலானோர் மாஸ்கோவிற்கு வெளியே உள்ள ஒரு சிறிய நகரத்தில் மிகவும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.