
இந்தியாவுடன் மோதலைத் தவிர்க்க சமாதானத்திற்கு ரஷ்யா மூலம் மன்றாடும் பாகிஸ்தான்
செய்தி முன்னோட்டம்
26 உயிர்களைக் கொன்ற பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, அதிகரித்து வரும் பதட்டங்களைத் தணிக்க ரஷ்யாவின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவிடம் சமாதானக் கொடியை நீட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏப்ரல் 22 தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் புதிய தாழ்வை அடைந்த நிலையில், சேதத்தை தவிர்க்க பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அமெரிக்கா, சவுதி அரேயா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மூலம் பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு முயன்ற நிலையில், அது பலனளிக்காததால், தற்போது இந்தியாவின் நீண்ட கால நட்பு நாடான ரஷ்யா மூலம் முயற்சிப்பதாகத் தெரிகிறது.
இந்தத் தாக்குதல் 2019 இல் புல்வாமாவிற்குப் பிறகு ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதல் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் தூதர்
பாகிஸ்தான் தூதர் பேட்டி
ரஷ்யாவிற்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அதன் மூலோபாய கூட்டாண்மையை மேற்கோள் காட்டி, ரஷ்யாவின் மத்தியஸ்தத்தை முறையாகக் கோரியுள்ளார்.
ரஷ்யாவின் அரசு நடத்தும் டாஸ் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள நேர்காணலில், பிராந்திய பதட்டங்களைத் தணிப்பதில் ரஷ்யாவின் வரலாற்றுப் பங்கை ஜமாலி வலியுறுத்தினார்.
இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான முந்தைய மோதலை முடிவுக்குக் கொண்டுவந்த 1966 தாஷ்கண்ட் ஒப்பந்தத்தைக் குறிப்பிட்டு அவர் இதை முன்வைத்துள்ளார்.
இதற்கிடையே, ராஜதந்திர ரீதியாக, ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.