
லாகூர், கராச்சியில் பறந்த 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்த பிறகு, இந்தியா பாகிஸ்தான் இடையே உச்சகட்ட பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை (மே 8) 12 இந்திய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் மேஜர் ஜெனரல் அகமது ஷெரிப் சவுத்ரி கூறுகையில், இஸ்ரேலில் தயாரிக்கப்பட்ட ஹரோப் மாடல்கள் என அடையாளம் காணப்பட்ட இந்திய ட்ரோன்கள் கராச்சி மற்றும் லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்திய ட்ரோன்கள் பாகிஸ்தான் வான்வெளியில் தொடர்ந்து வருவதாகவும், இதற்கு இந்தியா அதிக விலை கொடுக்க நேரிடும் என்றும் சவுத்ரி செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர்
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை
முன்னதாக, இந்தியா புதன்கிழமை (மே 7) அதிகாலையில் நடத்திய வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டு இந்திய பாதுகாப்புப் படைகள் நடத்திய இந்த தாக்குதலில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகள் அழிக்கப்பட்டன.
ஜம்மு & காஷ்மீரின் பஹல்காமில் 26 இந்திய பொதுமக்கள், பெரும்பாலும் சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட ஒரு கொடிய பயங்கரவாத தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்கிடையே, ராஜாங்க ரீதியாகவும், சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை, தீவிரவாதத்திற்கு ஆதரவு தரும் பாகிஸ்தான் மீது இந்தியா எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.