
பாகிஸ்தான் நாடாளுமன்றம் வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைப்பு - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்றத்தினை வரும் ஆகஸ்ட் 9ம் தேதி கலைக்க முடிவு செய்துள்ளதாகவும், இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவினை இன்று(ஆகஸ்ட்.,4) கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ஆலோசனை செய்த பின்னர் எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் காலக்கெடு இன்னும் முடிவடையாத நிலையில், முன்னதாகவே இதனை கலைக்க அந்நாட்டு பிரதமர் முடிவு செய்துள்ளார்.
மேலும் பிரதமர் முடிவின் படி நாடாளுமன்றம் கலைத்த 90 நாட்களுக்குள் மீண்டும் பொது தேர்தல் நடத்த போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதுவரை பாகிஸ்தான் நாட்டில் காபந்து அரசு ஆட்சியில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
கலைப்பு
கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டம்
நேற்று(ஆகஸ்ட்.,3) இரவு பிரதமர் மாளிகையில் நாடாளுமன்ற உறுப்பினர்களை கெளரவிக்கும் வகையில் நடைபெற்ற இரவு விருந்தில் இந்த அறிவிப்பினை பிரதமர் வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த விருந்தின் பொழுது தற்போதுள்ள நாட்டின் அரசியல் சூழலினை மாற்றி மீட்டெடுப்பது குறித்த ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
நாடாளுமன்ற கலைப்பு குறித்து இதுவரை ஆளும் பி.எம்.எல்.-ன் கட்சி உறுப்பினர்களுடன் விவாதிக்கவில்லை என்றும், இன்று நடைபெறவுள்ள கூட்டணி கட்சிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் காபந்து அரசாங்கத்தை அமைப்பதிற்கான இறுதி பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது என்றும் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கூட்டணி கட்சிகளின் செயல்பாடுகள் குறித்தும் கூட்டணி கட்சியின் தலைவர்களிடம் எடுத்துரைக்கப்படும் என்றும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.