சர்வதேச தீர்மானங்களை மீறி உளவு செயற்கைக்கோளை ஏவும் வடகொரியா
தென் கொரியா மற்றும் ஐக்கிய நாடுகளின் தீர்மானங்களின் எச்சரிக்கைகளை பொருட்படுத்தாத வட கொரியா, செயற்கைக்கோள் ஏவப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வட கொரியா பாலிஸ்டிக் ஏவுகணை தொழில்நுட்பத்தை பயன்படுத்த பல ஐநா தீர்மானங்கள் தடை விதித்துள்ளது. இருப்பினும், அந்நாடு நவம்பர் 22 முதல் டிசம்பர் 1, ஆம் தேதிக்கு இடையில் ராக்கெட் சுமந்து செல்லும் விண்வெளி செயற்கைக்கோளை ஏவுவதற்கு தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. ஜப்பானிய கடலோர காவல்படை செவ்வாய்கிழமை தனது இணையதளத்தில், மேற்குறிப்பிட்ட காலத்தில், வடகொரியா செயற்கைக்கோளை ஏவப்போவதாக கூறியிருந்தது. மேலும், சியோலின் பெருங்கடல்கள் மற்றும் மீன்வள அமைச்சகம் உடனடியாக கப்பல்களுக்கு ஒரு பயண எச்சரிக்கையை வெளியிட்டது.
வட கொரியாவின் நடவடிக்கை குறித்து முன்பே எச்சரித்த தென் கொரியா
ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா செய்தியாளர்களிடம் கூறுகையில், "செயற்கைக்கோள் ஏவுவதை ரத்து செய்ய வலியுறுத்தவும் மற்றும் கணிக்க முடியாத சூழ்நிலைகளுக்குத் தயாராக இருக்கும்படியும், பொது மக்களுக்குத் தெரிவிக்குமாறு" அமைச்சகங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தான் அறிவுறுத்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும், வட கொரியாவின் இந்த நடவடிக்கைகள், ஐநா ஒப்பந்தங்களை மீறுவதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தென் கொரியா சமீப காலமாகவே, வடகொரியா உளவு செயற்கைக்கோளை ஏவுவதற்கான இறுதிப் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.
செயற்கைக்கோள்களை செய்ய உதவிய ரஷ்யா
உளவு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த வடகொரியாவின் முதல் மற்றும் இரண்டாவது முயற்சிகள், முறையே கடந்த மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தோல்வியை தழுவியது. மூன்றாவது முயற்சி, அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்படும் என ஏற்கனவே வட கொரிய அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மூன்றாவது முயற்சியில், வட கொரியாவிற்கு ரஷ்யா உதவி இருப்பதால், இம்முயற்சி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக தென்கொரியா கணித்துள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுடனான சந்திப்பிற்குப் பிறகு, வடகொரியாவிற்கு செயற்கைக்கோள்களை உருவாக்க உதவ முடியும் என்று செப்டம்பர் மாதம் கூறியிருந்தார். மேலும் வட கொரியா, அமெரிக்காவின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமல் தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.