நிஜ்ஜார் கொலையில் சந்தேக நபர்கள் கனடாவை விட்டு வெளியேறவில்லை, விரைவில் கைது செய்யப்படலாம்: தகவல்
காலிஸ்தான் பிரிவினைவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில் தொடர்புடைய இருவர், கனடாவை விட்டு வெளியேறவில்லை எனவும், விரைவில் கைது செய்யப்படலாம் எனவும் தி குளோப் மற்றும் மெயில் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று காவல்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி, இரண்டு சந்தேக நபர்களும் பல மாதங்களாக காவல்துறை கண்காணிப்பில் இருப்பதாகவும், தற்போது ராயல் கனடியன் மவுண்டட் காவல்துறையால் விரைவில் கைது செய்யப்படலாம் என அந்த செய்தி கூறுகிறது. இருவர் மீதும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் போது, கொலையாளிகளுக்கு இந்திய அரசுடனான தொடர்பு குறித்து, காவல்துறை விளக்கமளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிஜ்ஜார் கொலையால் இந்தியா-கனடாவில் விரிசல்
இந்த ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி கனடாவின் சர்ரேயில் உள்ள குருத்வாராவிற்கு வெளியில், இந்தியாவில் 2020 ஆம் ஆண்டு தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொலை செய்யப்பட்டார். இந்த கொலையில், இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கான நம்பத் தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது, இருநாட்டு உறவுகள் இடையே விரிசலை ஏற்படுத்தியது. கனடாவின் குற்றச்சாட்டுகளை மறுத்து வரும் இந்தியா, அந்த குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை கோரிவருகிறது. இதனால், இருநாட்டு உறவுகள் இடையே விரிசல் ஏற்பட்டு, இரு நாடுகளும் பரஸ்பரம் அவர்களது தூதர்களை திரும்ப பெற்றுக் கொண்டனர். மேலும், சில வகைகளை தவிர்த்து, கனடாவுக்கு விசா வழங்குவதும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.