நெதன்யாகு, மஸ்க் அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் பகுதிக்கு வருகை
இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொண்டுள்ள உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன், அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலுக்குள்ளான கிப்புட்ஸ் கஃபர் அஸ்ஸா பகுதியை பார்வையிட்டனர். இந்த பயணத்தின் போது, நெதன்யாகு தாக்குதலின் சாட்சியங்களை மஸ்க்கிடம் நெதன்யாகு விளக்கினார். இப்பகுதியில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 20 இஸ்ரேலிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிப்புட்ஸில் நடந்த படுகொலைகள் பற்றி உள்ளூர் கவுன்சில் தலைவர் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் செய்தி தொடர் பிரிவின் பிரதிநிதியிடமிருந்து, மஸ்க் விளக்கங்களைக் கேட்கிறார். மேலும், துப்பாக்கி தாக்குதலில் கொல்லப்பட்ட, அச்சமுகத்தின் பாதுகாப்புத் தலைவர் ஓஃபிர் லிப்ஸ்டீன் வீட்டிற்கும், எலான் மஸ்க் அழைத்துச் செல்லப்பட்டார்.
இஸ்ரேல் ஜனாதிபதி, போர் அமைச்சரவையை சந்திக்கும் மஸ்க்
இவரின் திடீர் இஸ்ரேல் பயணம், அவருக்கு சொந்தமான ட்விட்டர் வலைதளத்தில், அதிகரித்து வரும் யூத-விரோத பேச்சுக்களை அவர் கட்டுப்படுத்த தவறிவிட்டதாக எழுந்த விமர்சனங்களை தொடர்ந்து நிகழ்ந்துள்ளது. எலான் மஸ்க், பிரதமர் உடனான சந்திப்புக்கு பின், இஸ்ரேல் ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் மற்றும் போர் அமைச்சரவையை சந்திக்க உள்ளார். நெதன்யாகுடனான சந்திப்பில், காசாவிற்கு இஸ்ரேல் அனுமதியில்லாமல் தனது ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வழியாக இணைய சேவை வழங்கப்பட மாட்டாது என மஸ்க் உறுதியளித்ததாக கூறப்படுகிறது. முன்னதாக, எரிபொருள் இல்லாமல் காசா பகுதியில் இணைய சேவைகள் முடங்கிய போது, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் மூலம் காசா பகுதிக்கு எலான் மாஸ்க் இணைய சேவை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
50 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டால் போர் நிறுத்தம் அதிகரிக்கப்படும்- இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பு ஏற்கனவே போர் நிறுத்தத்தை அதிகரிக்க விருப்பம் தெரிவித்திருந்த நிலையில், இஸ்ரேலும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. அதன்படி தற்போது, 50 பணய கைதிகள் விடுவிக்கப்பட்டால் போர் நிறுத்தம் செய்யப்படும் நாட்கள் அதிகரிக்கப்படும் என ஹமாஸ் இடம் தெரிவித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. மேலும் தற்போது வரை, 39 இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், 184 பணய கைதிகள் காசாவில் உள்ளதாக, இஸ்ரேலிய அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஐலன் லெவி தெரிவித்தார். ஹமாஸ் மேலும் நான்கு நாள் போர் நிறுத்தம் கோருவதாகவும், இஸ்ரேல், பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான பேச்சு வார்த்தைகளுடன், நாளுக்கு நாளாக போர் நிறுத்தத்தை அதிகரிக்க கேட்பதாகவும் கூறப்படுகிறது.