வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப்பொருட்களில் சர்க்கரையை கலக்கும் நெஸ்லே
உலகின் முன்னணி நுகர்வோர் பொருட்கள் நிறுவனமான நெஸ்லே, வளரும் நாடுகளில் விற்கப்படும் குழந்தைகளின் பால் மற்றும் தானியப் பொருட்களில் சர்க்கரை மற்றும் தேன் சேர்ப்பதாக ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. நெஸ்லேவின் இந்த செயல், உடல் பருமன் மற்றும் நாள்பட்ட நோய்களைத் தடுப்பதற்காக வழங்கப்பட்ட சர்வதேச வழிகாட்டுதல்களுக்கு முரணாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சுவிஸ் கண்காணிப்புக் குழுவான பப்ளிக் ஐ, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவிலிருந்து, நெஸ்லேவின் குழந்தை உணவுப் பொருட்களின் மாதிரிகளை ஆய்விற்கு உட்படுத்தியது. ஆய்விற்கு பின்னர் இந்த அதிர்ச்சி தகவல் கண்டறியப்பட்டுள்ளது.
நெஸ்லேவின் குழந்தை தயாரிப்புகளில் சேர்க்கப்பட்ட சர்க்கரைகள்
ஆய்வக சோதனைகளில், நிடோ என்று அழைக்கப்படும் ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கான ஃபார்முலா பால், மற்றும் ஆறு மாதங்கள் முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கான உணவான செரெலாக்கில், சுக்ரோஸ் அல்லது தேன் சேர்க்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது. யுனைடெட் கிங்டம்(UK) உட்பட நெஸ்லேவின் முதன்மை ஐரோப்பிய சந்தைகளில் விற்கப்படும் சிறு குழந்தைகளுக்கான ஃபார்முலாக்களில் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை. வளர்ந்த குழந்தைகளை இலக்காகக் கொண்ட சில உணவு பொருட்களில் சர்க்கரை சேர்க்கப்பட்டது கண்டறியப்பட்டாலும், ஆறு மாதங்கள் முதல் ஒரு வருடம் வரையிலான குழந்தைகளை இலக்காகக் கொண்ட தயாரிப்புகளில் சர்க்கரை எதுவும் சோதனைகளில் கண்டறியப்படவில்லை.
நெஸ்லேவின் "ஆபத்தான இரட்டை தரநிலைகளுக்கு" முடிவு கட்ட தன்னார்வல அமைப்பு அழைப்பு
ஐரோப்பாவிற்கான WHO வழிகாட்டுதல்கள், மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எந்த உணவிலும் சர்க்கரைகள்/இனிப்பு சேர்க்கப்படக்கூடாது என்று கூறுகிறது. மற்ற பிராந்தியங்களுக்கு குறிப்பிட்ட வழிகாட்டுதல் எதுவும் வழங்கப்படவில்லை என்றாலும், ஐரோப்பிய ஆவணம் உலகளாவிய பொருத்தத்தைக் கொண்டுள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். எடை அதிகரிப்பு மற்றும் பல் சிதைவு போன்ற ஆபத்துகள் காரணமாக நான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுக்கு எதிராக இங்கிலாந்து அறிவுறுத்துகிறது. இதேபோல், அமெரிக்க அரசாங்க வழிகாட்டுதல்கள் இரண்டு வயதுக்கு குறைவானவர்களுக்கு சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்க வலியுறுத்துகிறது. ப்ளிக் ஐயின் விவசாயம் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் லாரன்ட் கேபரெல்,"நெஸ்லே இந்த ஆபத்தான இரட்டை தரநிலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்." எனக்கூறியுள்ளார்.