நேபாளத்தில் மீண்டும் கனமழை, நிலச்சரிவு: 21 பேர் பலி, 1,200-க்கும் மேற்பட்டோர் மீட்பு
செய்தி முன்னோட்டம்
நேபாளத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை குறைந்தது 21 பேர் உயிரிழந்துள்ளனர். பல்பா மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு மாதாகதி கிராமப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே இடத்தில் 5 பேர் உயிரிழந்தனர். கடந்த 4 நாட்களில் மழை, வெள்ளம், நிலச்சரிவு மற்றும் மின்னல் தாக்குதல் காரணமாக மேலும் 16 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 5 நாட்களில் மட்டும் மழை தொடர்பான 439 அசம்பாவித சம்பவங்கள் பதிவாகியுள்ளன. வெள்ளத்தில் சிக்கிய 1,284 பேரை பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.
நதிகள்
ஆபத்து கட்டத்தை தாண்டிய நதிகள்
லும்பினி மாநிலத்தின் ரூபந்தேஹி மாவட்டத்தில் உள்ள டினாவ் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆபத்து கட்டத்தைத் தாண்டியதால், புட்வால் பகுதியில் 6 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன.
நதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால், சுமார் 1,000 மக்கள் இரவோடு இரவாகப் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
சித்வான் மாவட்டத்தில் உள்ள நாராயணி நதி (9.23 மீட்டர்) மற்றும் ரியு ஆறு (3.92 மீட்டர்) ஆகியவை தங்களது அபாய கட்டத்தைத் தாண்டிப் பாய்வதால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடும் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
கனமழை காரணமாக கர்னாலி மாநிலத்தின் முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.
பேரிடர்
தொடரும் இயற்கை பேரிடர்
நாவல்பராசி மேற்கு மற்றும் சப்தரி மாவட்டங்களில் நாராயணி மற்றும் சப்தகோஷி நதிகளின் வெள்ளத்தால் 389 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
கடந்த ஆகஸ்ட் மாதம் நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தந்த திடீர் வெள்ளத்தில் 1,450-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 5,000-க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், தற்போது மீண்டும் ஏற்பட்டுள்ள இந்த மழைப்பொழிவு அந்நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.