இஸ்ரேல்-ஹமாஸ் போர் நாள் 85: இஸ்ரேல் தாக்குதலில் 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் பலி
காசா மீது இஸ்ரேல் வெள்ளிக்கிழமை நடத்திய கடுமையான பீரங்கி மற்றும் வான்வெளி தாக்குதலில், 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்துள்ளனர். அக்டோபர் 7, ஹமாஸ் அமைப்பின் இஸ்ரேல் மீதான திடீர் ஏவுகணை தாக்குதலுக்கு பின், இஸ்ரேல்- பாலஸ்தீனம் இடையே போர் மூண்டது. 85வது நாளாக போர் நடந்து வரும் நிலையில், காசா நகரத்தின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி, ஹமாஸ் அமைப்பை முழுவதுமாக அழிக்கும் நோக்கோடு, இஸ்ரேல் தனது தரைவழி தாக்குதலை மேற்கொண்டுவருகிறது. தற்போது மேலும் தெற்கு நோக்கி முன்னேறும் நோக்கோடு இஸ்ரேல், கான் யுனிஸ் நகரில் குண்டு மழைபொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
காசா நகரின் 1% மக்கள் போரில் உயிரிழப்பு
24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் மேலும் 187 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் காசாவின் பலி எண்ணிக்கை 21,507 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகள் மற்றும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. போரில் கொல்லப்பட்டவர்கள் காசா நகரின் மொத்த மக்கள் தொகையில் 1% என்பது குறிப்பிடத்தக்கது. இதில் நூற்றுக்கணக்கானவர்களின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் இன்னும் மீட்கப்படாமல் சிக்கி உள்ளது. போர் ஏற்படுத்திய கடினமான விளைவுகளால், காசாவின் கிட்டத்தட்ட அனைத்து 2.3 மில்லியன் மக்களும் இருப்பிடங்களை விட்டு வெளியேறி உள்ளனர்.
காசாவிற்கு தடுப்பூசிகளை வழங்க இஸ்ரேல் உதவி
போலியோ, காசநோய், ஹெபடைடிஸ், டிப்தீரியா, டெட்டனஸ், இருமல் மற்றும் மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு எதிராக 1.4 மில்லியன் மக்களை பாதுகாக்கும் வகையில், 49,130 டோஸ் தடுப்பூசிகளை காசாவிற்குள் செல்ல உதவியதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தடுப்பூசி பரிமாற்றம் யுனிசெஃப்யால் ஒருங்கிணைக்கப்பட்டது. காசா வெளியில் இருந்து வரும் உணவு, எரிபொருள் மற்றும் மருத்துவப் பொருட்களையே முழுவதும் நம்பியுள்ளது. மேலும் சர்வதேச ஏஜென்சிகள் இஸ்ரேலிய ஆய்வுகள் மூலம் பொருட்கள் அனுமதிக்கப்படுவது, காசாவின் பரந்த தேவைகளில் ஒரு சிறிய பகுதியே பூர்த்தி செய்கிறது என்று குற்றம் சாட்டுகின்றன. ஆனால் இஸ்ரேல், காசாவிற்கு சொல்லும் எந்த விதமான உதவி பொருட்களையும் தடுக்கவில்லை எனவும், காசாவிற்குள் அதன் விநியோகத்தில் பிரச்சனை இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.