
மியான்மர் நிலநடுக்கத்தில் தொடரும் மீட்பு பணி, இறப்பு 2,000 ஐ நெருங்குகிறது
செய்தி முன்னோட்டம்
மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தில் இதுவரை சுமார் 2,000 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. அதே நேரத்தில் மண்டலே நகரில் உள்ள கிரேட் வால் ஹோட்டலின் இடிபாடுகளில் இருந்து ஒரு பெண் உயிருடன் மீட்கப்பட்டதாக சீன அரசு பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை மியான்மரில் பெரும் அழிவையும் அண்டை நாடான தாய்லாந்தில் சேதத்தையும் ஏற்படுத்திய 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தின் மையப்பகுதிக்கு அருகில் மண்டலே உள்ளது. தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில், இடிந்து விழுந்த கட்டுமான இடிபாடுகளுக்குள் புதைந்திருப்பதாக நம்பப்படும் 76 பேரைத் தேடும் பணியை அவசரக் குழுவினர் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கினர்.
நிவாரணம்
அதிகரிக்கும் பாதிப்புகள், நிவாரணம் வழங்கும் உலக நாடுகள்
நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 18 ஆக இருந்த தாய்லாந்தின் இறப்பு எண்ணிக்கை இன்று அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில், மியான்மரில், குறைந்தது 1,700 பேர் இறந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசு ஊடகங்கள் தெரிவித்தன. எனினும் மியான்மரில் இறந்தவர்களின் எண்ணிக்கை 2,028 ஐ எட்டியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய மியான்மரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 23,000 பேருக்கு நிவாரணப் பொருட்களை விரைந்து அனுப்பி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மியான்மரின் அண்டை நாடுகளான இந்தியா, சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ரஷ்யாவிலிருந்தும் உதவி மற்றும் பணியாளர்களுடன் நிவாரணப் பொருட்கள் மற்றும் குழுக்கள் அனுப்பியுள்ளன. அமெரிக்கா 2 மில்லியன் டாலர் உதவியை உறுதியளித்தது.