ரஷ்ய அதிபர் புடினுடன் செல்ஃபி எடுத்த 16 வயது கேரள ஏஐ மேதை ராகுல் ஜான் அஜு யார்?
செய்தி முன்னோட்டம்
ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மாநாட்டில் கேரளாவை சேர்ந்த 16 வயது இந்திய ஏஐ கண்டுபிடிப்பாளர் ராகுல் ஜான் அஜுவின் பணிகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் டோகாயேவ் உடன் இணைந்து இந்தியா ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் நாடுகளின் இளம் ஏஐ கண்டுபிடிப்பாளர்களுடன் புதின் உரையாடினார். அப்போது பேசிய புதின் இளைஞர்கள் தங்கள் சொந்தத் தீர்வுகளை உருவாக்க உதவும் ராகுலின் பணி பிரதமர் நரேந்திர மோடியின் மேக் இன் இந்தியா அழைப்பை நனவாக்குவதாகப் புகழ்ந்ததோடு நிகழ்ச்சிக்குப் பிறகு அவருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டார்.
கேரள இளைஞர்
12 வயதில் ரோபோ உருவாக்கி 'இந்தியாவின் ஏஐ குழந்தை' எனப் பெயரெடுத்த கேரள இளைஞர்
கேரளாவை சேர்ந்த 16 வயதான ராகுல் ஜான் அஜு ஒரு இளம் ஏஐ தொழில்முனைவோர் மென்பொருள் உருவாக்குநர் மற்றும் கல்வியாளராகத் திகழ்வதால் இந்தியாவின் ஏஐ குழந்தை என அழைக்கப்படுகிறார்.
சிறுவயதிலேயே தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்ட இவர் தனது 12-வது வயதிலேயே மீ-பாட் என்ற முதல் மனித உருவ ரோபோவை உருவாக்கினார்.
சுய கற்றல் மூலம் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபாட்டிக்ஸ் திறன்களை வளர்த்துக் கொண்ட ராகுல் ஏஐரியல்ம் டெக்னாலஜிஸ் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கி இதுவரை லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு ஏஐ பயிற்சி அளித்துள்ளார்.
இந்திய மொழி
சட்டத் தகவல்களை எளிதாக்கும் புராஜெக்ட் 47எக்ஸ் முதல் இந்திய மொழி ஏஐ கருவிகள் வரை
சாமானிய மக்களும் சிக்கலான சட்டத் தகவல்களை எளிதில் புரிந்துகொள்ள உதவும் வகையில் கேரளா மற்றும் துபாய் அரசுகளின் ஒத்துழைப்புடன் ராகுல் உருவாக்கிய புராஜெக்ட் 47எக்ஸ் இவரது மிக முக்கியமான திட்டமாகும்.
மேலும் ஆங்கிலத்தை மட்டுமே சார்ந்திருக்காமல் மலையாளம் இந்தி மற்றும் உருது ஆகிய இந்திய மொழிகளில் மக்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உதவும் குரல்-செயலாக்க அமைப்புகளையும் இவர் உருவாக்கியுள்ளார்.
இத்துடன் மாணவர்கள் செயற்கை நுண்ணறிவை எளிதாகவும் சுவாரசியமாகவும் கற்றுக்கொள்ள திங்க்கிராஃப்ட் என்ற கல்வித் தளத்தையும் அவர் நடத்தி வருகிறார்.
புடினுடன் விவாதம்
கல்வியில் ஏஐ பயன்பாடு குறித்து புடினுடன் நடந்த சுவாரசியமான விவாதம்
இந்த சந்திப்பின் போது மாணவர்கள் ஏஐ தொழில்நுட்பத்தை அதிகம் சார்ந்திருந்தால் சுயமாகச் சிந்திக்கும் மற்றும் விஷயங்களை நினைவில் கொள்ளும் திறன் பாதிக்கப்படும் என அதிபர் புதின் எச்சரித்தார்.
இதற்குப் பதிலளித்த ராகுல் செயற்கை நுண்ணறிவைக் கால்குலேட்டருடன் ஒப்பிட்டு மாணவர்கள் முதலில் அடிப்படை அறிவைப் பெற்ற பிறகே ஏஐயை உதவியாகப் பயன்படுத்த வேண்டும் என விளக்கினார்.
அமெரிக்கா மற்றும் சீனாவின் மாடல்களை அப்படியே பின்பற்றாமல் இந்தியாவின் தேவைகளுக்கு ஏற்ப உள்நாட்டுத் தீர்வுகளை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தும் ராகுல் முன்னதாக டெல்லியில் நடந்த மாநாட்டில் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுடனும் கலந்துரையாடியுள்ளார்.