அக்டோபர் 7ஆம் தேதி மாலத்தீவு அதிபர் இந்தியா வர உள்ளதாக தகவல்
மாலத்தீவு அதிபர் முகமது முய்சு இருதரப்பு பயணமாக அக்டோபர் 7ஆம் தேதி இந்தியா வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ஏஎன்ஐ வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக ஜூன் 9ஆம் தேதி டெல்லிக்கு வந்த முகமது முய்சுவின் இரண்டாவது இந்திய பயணமாக இது இருக்கும். முன்னதாக, கடந்த செப்டம்பர் 10 அன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தரக்குறைவான கருத்துக்களுக்காக ஜனவரி மாதம் இடைநீக்கம் செய்யப்பட்ட மாலத்தீவின் இரண்டு ஜூனியர் அமைச்சர்கள் அரசாங்கத்தில் இருந்து ராஜினாமா செய்த ஒரு நாளில், இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அந்நாட்டு ஜனாதிபதி மாளிகை வெளியிட்டது. இரு நாட்டு தலைவர்களுக்கும் ஏற்ற வகையில் தேதி முடிவு செய்யப்படும் என அப்போது தெரிவிக்கப்பட்டது.
சீனாவுக்கு ஆதரவான முகமது முய்சு
மாலத்தீவில் இந்தியாவை வெளியேற்றுவோம் என்ற பிரச்சாரத்தை முன்வைத்து அதிபரான முகமது முய்சு சீன ஆதரவு நபராக அறியப்படுகிறார். வழக்கமாக மாலத்தீவில் அதிபராக பதவியேற்பவர்கள் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வருவது வழக்கமாக இருந்து வந்த நிலையில், அதை மாற்றி முதலில் துருக்கிக்கும், சீனாவுக்கும் சென்றுவிட்டு, பின்னர் அவர் இந்தியா வந்தது குறிப்பிடத்தக்கது. எனினும், தனது முந்தைய இந்தியாவை வெளியேற்றும் பிரச்சாரத்திலிருந்து பின்வாங்கிய முகமது முய்சு, செப்டம்பர் இறுதியில், அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பேசும்போது, இந்தியா அவுட் கொள்கையை கடைபிடிக்கவில்லை என மறுத்தார். வெளிநாட்டு ராணுவம் தங்கள் மண்ணில் இருப்பதால் மாலத்தீவு பல பிரச்சினைகளை எதிர்கொண்டதால்தான் ராணுவத்தை விலக்குமாறு கோரினோம் என அதற்கு ஒரு விளக்கமும் கொடுத்தார்.
இந்தியா-மாலத்தீவு உறவுகள்
மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு நவம்பரில் முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையேயான உறவுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அவர் சத்தியப்பிரமாணம் செய்த சில மணி நேரங்களுக்குள், மாலத்தீவில் உள்ள மூன்று விமான தளங்களை நிர்வகிக்கும் இந்திய இராணுவ வீரர்களை திரும்பப் பெற வேண்டும் என்று அவர் கோரினார். இதையடுத்து இந்தியர்கள் பலரும் மாலத்தீவுக்கான சுற்றுலா திட்டங்களை ரத்து செய்தனர். இது பொருளாதார ரீதியாக மாலத்தீவுக்கு நெருக்கடி கொடுத்தது. மேலும், இந்தியா லட்சத்தீவுகளை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக மாற்றும் முயற்சியையும் தொடங்கியது. எனினும், 2024 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்ற நிகழ்வில் பங்கேற்க முகமது முய்சுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட பிறகு நிலைமை தற்போது மேம்பட்டு வருகிறது.