போதை பொருள் உபயோகத்தை குற்றமற்றதாக மாற்ற இருக்கும் மலேசியா
சிறிதளவு போதைப் பொருள் வைத்திருப்பதையும் பயன்படுத்துவதையும் குற்றமற்றதாக மாற்றுவதற்கான சட்டத்தை மலேசியா அறிமுகப்படுத்த இருப்பதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமின் அரசாங்கத்தால் தொடரப்பட்ட குற்றவியல் நீதி சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாகும். இந்த நீதி சீர்திருத்தங்களுக்கு கீழ், கட்டாய மரண தண்டனை மற்றும் இறக்கும் வரையிலான ஆயுள் தண்டனை ஆகியவை இந்த ஆண்டு நீக்கப்பட்டது. மேலும், தற்கொலை முயற்சிகளை குற்றமற்றதாக்க முயற்சித்து வருகிறோம் என்று மலேசிய அரசாங்கம் தெரிவித்திருந்தது.
போதை பொருள் வைத்திருப்பவர் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படுவார்
பிற தென்கிழக்கு ஆசிய நாடுகளை போலவே, மலேசியாவிலும் போதைப்பொருள் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மாதம், மலேசிய அரசாங்கம் செய்த சீத்திருத்தங்களின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்துபவர்களுக்கு விதிக்கப்படும் கட்டாய மரண தண்டனையின் விதிகள் தளர்த்தப்பட்டன. எனவே மலேசியாவில், போதைப்பொருள் கடத்தும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கலாமா வேண்டாமா என்பதை நீதிபதிகளே இனி தீர்மானிக்கலாம். தற்போது முன்மொழியப்படுள்ள சட்டத்தின் படி, சிறிதளவு போதைப் பொருள் வைத்திருப்பவர்கள் கைது செய்யப்பட்டால், அவர்கள் மீது வழக்குத் தொடரப்படாது. மாறாக, கைது செய்யப்பட்டவர் சிகிச்சைக்காக போதைப்பொருள் மறுவாழ்வு மையங்களுக்கு அனுப்பப்படுவார் என்று உள்துறை அமைச்சர் சைபுதீன் நசுஷன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.