எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் மூன்று நாட்கள் அமெரிக்க பயணம்
எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்ற பின், ராகுல் காந்தி செப்டம்பர் 8 முதல் 10 வரை அமெரிக்காவிற்கு மூன்று நாட்கள் பயணம் மேற்கொள்ள உள்ளார். ராகுல் காந்தியின் அமெரிக்க பயணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா வெளியிட்டார். இதன்படி, ராகுல் காந்தி செப்டம்பர் 8 ஆம் தேதி டெக்சாஸின் டல்லாஸிலும், செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் வாஷிங்டன் டிசியிலும் இருப்பார். அவர் தனது பயணத்தின் போது இந்திய புலம்பெயர்ந்தோர் மற்றும் உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த கல்வியாளர்கள், பத்திரிகையாளர்கள், சிந்தனையாளர்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப வல்லுநர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரைச் சந்திப்பார்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவரான பிறகு முதல்முறையாக அமெரிக்கா செல்லும் நிலையில், பிரதமர் மோடியும் செப்டம்பர் இறுதியில் அமெரிக்கா செல்ல உள்ளார். 79வது ஐநா பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றுவதற்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, செப்டம்பர் 22 அன்று நியூயார்க்கில் உள்ள மேடிசன் சதுக்கத்தில் ஒரு பொதுக்கூட்டத்திலும் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டத்தில் அமெரிக்காவின் 42 மாகாணங்களில் உள்ள புலம்பெயர் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் அமெரிக்கர்கள் என பலரும் கலந்துகொள்ள உள்ளதாகக் கூறப்படுகிறது. அமெரிக்காவில் நவம்பர் தொடக்கத்தில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், இந்தியாவின் பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் குறுகிய இடைவெளியில் அமெரிக்க பயணம் மேற்கொள்வது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.