Page Loader
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவின் இடம் என்ன?
உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு

உலகின் பாதுகாப்பான நாடுகள் பட்டியல் வெளியீடு! இந்தியாவின் இடம் என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 23, 2025
08:24 am

செய்தி முன்னோட்டம்

உலகின் மிகவும் பாதுகாப்பான நாடுகள் பட்டியலில், இந்தியா முன்னணி வளர்ந்த நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தை முந்தியுள்ளதென நம்பியோ (Numbeo) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான பாதுகாப்பு குறியீடு தெரிவிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் நம்பியோ தரவுத்தளம் வெளியிடும் இந்த பட்டியலில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினுக்கு இடையில் பைரனீஸ் மலையில் அமைந்துள்ள ஐரோப்பிய நாடான அன்டோரா, இந்தாண்டின் உலகின் மிகப் பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்டோராவுக்கு அடுத்த இடத்தில, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன், ஹாங்காங், ஆர்மீனியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளன.

முன்னேற்றம்

பட்டியலில் இந்தியா முன்னேற்றம்

147 நாடுகளில் 55.7 புள்ளிகளுடன் இந்தியா 66-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கிடையில், அமெரிக்கா 50.8 புள்ளிகளுடன் 89-வது இடத்திலும், இங்கிலாந்து 51.7 புள்ளிகளுடன் 87-வது இடத்திலும் உள்ளன. இது பாரம்பரியமாக பாதுகாப்பான நாடுகளாக கருதப்படும் இந்நாடுகளை விட இந்தியா சிறப்பாக இருப்பதை காட்டுகிறது. இந்த தரவரிசை பயனாளர்கள் வழங்கும் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுகிறது. குற்ற விகிதங்கள், பொது பாதுகாப்பு மீதான நம்பிக்கை, சமூக மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்த கவலைகள் உள்ளிட்ட பல்வேறு கூறுகள் மதிப்பீட்டில் பயன்படுத்தப்படுகின்றன.

ஆசியா நாடுகள்

இந்தியாவை விட பாதுகாப்பான நாடாக பாகிஸ்தான்?

ஆசிய நாடுகளில் குறிப்பிடும்படியாக சீனா 76.0 புள்ளிகள் பெற்று 15-வது இடத்தில் உள்ளது. அதேபோல, இலங்கை 59-வது இடத்தினை பிடித்துள்ளது. சுவாரசியமாக, பாகிஸ்தான், இந்தியாவை விட ஒரு இடம் முன்னேறி 65-வது இடத்தில் உள்ளது. அதே நிலையில், பங்களாதேஷ் 126-வது இடத்தில் உள்ளது என அந்த பட்டியல் கூறுகிறது. பட்டியலில், வெனிசுலா, 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தைப் பிடித்து உலகின் மிகவும் குறைந்த பாதுகாப்பு கொண்ட நாடாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல குறைவான புள்ளிகளை பெற்று, பப்புவா நியூ கினியா, ஹைதி, ஆப்கானிஸ்தான், தென்னாபிரிக்கா, ஹோண்டுராஸ், டிரினிடாட் & டொபாகோ, சிரியா, ஜமைக்கா மற்றும் பெரு ஆகியன பாதுகாப்பற்ற நாடுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் விரிவான தகவலுக்காக, நம்பியோ இணையதளத்தை (www.numbeo.com) (http://www.numbeo.com) பார்வையிடலாம்.