பாகிஸ்தானை சேர்ந்த தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்தின் தலைவர் காலமானார்
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பிரிவினைவாத இயக்கத்தின் தலைவரும், இந்தியாவால் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டவருமான லக்பீர் சிங் ரோட், பாகிஸ்தானில் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 72. தடை செய்யப்பட்ட காலிஸ்தான் விடுதலை படை மற்றும் சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் தலைவரான லக்பீர் சிங், இந்தியாவால் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ், தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானில் தஞ்சம் புகுந்தார். லக்பீர் சிங், 1984ல் பொற்கோயிலுக்குள் கொல்லப்பட்ட ஜர்னைல் சிங் பிந்தரன்வாலேவின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. லக்பீர் சிங் ரோட்டின் சகோதரரும் முன்னாள் அகல் தக்த் ஜதேதாருமான ஜஸ்பீர் சிங் ரோட், லக்பீர் சிங் காலமானதை உறுதி செய்தார். மேலும், லக்பீர் சிங்கின் இறுதிச் சடங்குகள் நேற்று முடிந்ததாகவும் தெரிவித்தார்.
தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்த சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு
சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பின் தலைவரான லக்பீர் சிங், அந்த அமைப்பை 1984 ஆம் ஆண்டு நிறுவினார். இந்த அமைப்பு கனடா மற்றும் இங்கிலாந்தில் செயல்பாட்டில் உள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை, சர்வதேச சீக்கிய இளைஞர் கூட்டமைப்பை செயல்பாட்டில் உள்ள தீவிரவாத அமைப்பு எனக் கூறுகிறது. இந்த அமைப்பிற்கு லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2002 ஆம் ஆண்டு, பயங்கரவாதச் செயல்களைத் தடை செய்யும் சட்டத்தின்(பொடா) கீழ் இந்த அமைப்பு தடை செய்யப்பட்டது. பஞ்சாபின் மோகா மாவட்டத்தின் பகபுரானா தாலுகாவில் உள்ள ஸ்மல்சார் அருகே உள்ள கோதே குருபுரா கிராமத்தில், லக்பீர் சிங்கிற்கு சொந்தமான நிலங்களை கையகப்படுத்த, மொகாலி தேசிய புலனாய்வு துறை சிறப்பு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது.