பாகிஸ்தானில் பயங்கர துப்பாக்கிச் சூடு: 18 பயங்கரவாதிகள், 11 போலீசார் பலி
செய்தி முன்னோட்டம்
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள கோஹாட் மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பயங்கர துப்பாக்கிச் சண்டையில் குறைந்தது 18 பயங்கரவாதிகளும், 11 காவல்துறையினரும் உயிரிழந்துள்ளனர். தாராபுகாச் பகுதியில் சட்டவிரோத தங்கச் சுரங்கங்களுக்கு எதிரான அதிரடி நடவடிக்கையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த காவல்துறையினர் மீது, தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் வெடித்துள்ளது.
உயிரிழப்புகள்
தாக்குதலின் பின்னணி
சட்டவிரோத தங்க சுரங்க தொழிலில் ஈடுபட்டுள்ள குற்றக் கும்பல்களுடன் இணைந்து பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
TTP பயங்கரவாதிகளை ஃபித்னா-அல்-கவாரிஜ் எனக் குறிப்பிட்டுள்ள காவல்துறை, குற்றப் பின்னணி கொண்ட கும்பல்களின் தூண்டுதலின் பேரிலேயே காவல்துறையினர் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
இருதரப்புக்கும் இடையே நடந்த கடுமையான துப்பாக்கிச் சண்டையில் DSP கம்பாட் ஹைதர் ஜமான் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் முக்தியார் உட்பட 11 காவலர்கள் உயிரிழந்தனர்.
பதிலடித் தாக்குதலில் 18 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த மோதலின் போது 5 காவல்துறை வாகனங்களுக்கு பயங்கரவாதிகள் தீ வைத்தனர்.
அவசரநிலை பிரகடனம்
பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கண்டனம்
தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக மாவட்டத் தலைமை போதனா மருத்துவமனையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நாட்டின் அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த காவலர்களை 'மாவீரர்கள்' எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
குற்றக் கும்பல்களுக்கும் TTP பயங்கரவாதிகளுக்கும் இடையிலான இந்தக் கூட்டணி, நாட்டில் அமைதியின்மையைப் பரப்பும் முயற்சி என அவர் சாடியுள்ளார்.
ஆப்கானிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி TTP பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தத் தலிபான் நிர்வாகம் அனுமதி அளிப்பதாக பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இருப்பினும், ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.