
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் JeM தீவிரவாதி மசூத் அசார் தென்பட்டதாக உளவுத்தகவல்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் மிகவும் தேடப்படும் பயங்கரவாதியான ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசார், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தான் பகுதியில் உலவுவதாக கூறப்படுகிறது. உளவுத்துறை தகவல்களை மேற்கோள் காட்டி, இந்தியா டுடே வெளியிட்ட செய்தியின்படி, மசூத் அசார், அவரது பஹாவல்பூர் கோட்டையிலிருந்து 1,000 கி.மீ. தொலைவில் காணப்பட்டதாகக் கூறுகின்றன. தகவல்படி, அசார் சமீபத்தில் ஸ்கர்டுவில், குறிப்பாக சத்பரா சாலை பகுதியைச் சுற்றி காணப்பட்டார். இந்தப் பகுதியில் குறைந்தது இரண்டு மசூதிகள், இணைக்கப்பட்ட மதரஸாக்கள் மற்றும் பல தனியார் மற்றும் அரசு விருந்தினர் இல்லங்கள் உள்ளன. கவர்ச்சிகரமான ஏரிகள் மற்றும் இயற்கை பூங்காக்களைக் கொண்ட சுற்றுலா மையமாக இந்த இடம் அறியப்படுகிறது
கூற்று
மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என பாகிஸ்தான் கூறியது
முன்னதாக சில வாரங்களுக்கு முன்னர், பாகிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, மசூத் அசார் ஆப்கானிஸ்தானில் இருக்கலாம் என்று கூறியதைத் தொடர்ந்து இந்த வெளிப்பாடு வந்துள்ளது. பாகிஸ்தான் மண்ணில் அசார் கண்டுபிடிக்கப்பட்டால் இஸ்லாமாபாத் அவரை இந்தியாவிடம் ஒப்படைக்கும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. "அவர் பாகிஸ்தான் மண்ணில் இருப்பதாக இந்திய அரசாங்கம் எங்களுடன் தகவல்களைப் பகிர்ந்து கொண்டால், அவரைக் கைது செய்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைவோம்" என்று பூட்டோ சமீபத்திய பேட்டியில் அல் ஜசீராவிடம் கூறினார்.
பிம்பம்
ஆசாரின் உறைவிடத்தை மறைக்க JeM திட்டம்
2016 பதான்கோட் விமானப்படை தள தாக்குதல் மற்றும் 40க்கும் மேற்பட்ட வீரர்களைக் கொன்ற 2019 புல்வாமா தாக்குதல் உட்பட இந்தியாவில் பல பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு அசார் மூளையாக செயல்பட்டுள்ளார். ஜெய்ஷ் அமைப்பின் ஆன்லைன் தளங்கள் வேண்டுமென்றே தவறான தகவல்களை பரப்பி வரும் நிலையில், இந்திய உளவுத்துறை அமைப்புகள் அசாரின் நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றன. அவரது உரைகளின் பழைய ஆடியோ கிளிப்களை மறுசுழற்சி செய்து அவர் நீண்டகாலமாக பஹாவல்பூரில் இருப்பதை போன்ற பிம்பத்தை JeM உருவாக்க முயன்று வருகிறது.
புகலிடம்
மசூத் அசாருக்கு பாகிஸ்தானில் இரண்டு புகலிடங்கள்
மசூத் அசாருக்கு அங்கு இரண்டு அறியப்பட்ட புகலிடங்கள் உள்ளனஎன அந்த செய்தி தெரிவிக்கிறது. ஒன்று, ஆபரேஷன் சிந்தூரின் போது குறிவைத்து தகர்க்கப்பட்ட ஜாமியா சுப்ஹான் அல்லா- இது ஜெய்ஷ் அமைப்பின் தலைமையகம். மற்றொன்று ஜாமியா உஸ்மான் ஓ அலி- இது நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்திருக்கும் ஒரு மசூதி. அதன் அருகில் ஒரு மருத்துவமனை இருப்பதும் அவருடைய பாதுகாப்பிற்கு ஒரு அரண் போல அமைந்தது. எனினும், ஜாமியா சுப்ஹான் அல்லா மீதான இந்தியாவின் தாக்குதல்களில் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயங்கரவாதி
பல உலக நாடுகளால் தேடப்படும் பயங்கரவாதி அசார்
இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபையால் தடை விதிக்கப்பட்ட அசார், 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தாக்குதல் உட்பட இந்தியாவில் நடந்த பல பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர் என்று நம்பப்படுகிறது. அவர் ஒரு முறை இந்தியா ராணுவத்தினரால் பிடிபட்டார். எனினும், அவரை, அவரது கூட்டாளிகள் கந்தஹார் விமான கடத்தி சென்று பயணிகளின் பணயமாக மீட்டனர். மசூத் விடுதலையான உடனேயே, அசார் ஜெய்ஷ் இ முகமது என்ற அமைப்பை நிறுவினார்.
தீவிரவாதிகள்
தீவிரவாதிகளின் பாதுகாப்பு புகலிடம் பாகிஸ்தான் என்கிறது உளவுத்தகவல்
அசார் பஹவல்பூரிலிருந்து மாற்றப்படுவது இது முதல் முறை அல்ல. 2019 பாலகோட் வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, அவர் பஹவல்பூரிலிருந்து பெஷாவரில் உள்ள ஒரு பாதுகாப்பான வீட்டிற்கு மாற்றப்பட்டார். பாகிஸ்தானில் பாதுகாப்பான புகலிடம் கிடைத்த மற்றொரு பயங்கரவாதி, ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத அமைப்பின் தலைவராகவும் நியமிக்கப்பட்ட சையத் சலாவுதீன். இவர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு ஆடம்பரமான பகுதியில் இருந்து செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது. பல அடுக்கு பாதுகாப்பில் நடமாடுவதாக உளவு செய்திகள் தெரிவிக்கின்றன.