பாகிஸ்தானில் ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி சுட்டுக்கொலை
ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தீவிரவாதியும், அந்த அமைப்பின் தலைவரான மௌலானா மசூத் அசாரியின் நெருங்கிய கூட்டாளியுமான மௌலானா ரஹீம் உல்லா தாரிக், பாகிஸ்தானின் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார். கராச்சியின் ஆரங்கி நகரத்தில் நடைபெற்ற மதக்கூட்டத்தில் பங்கேற்க சென்றபோது, அடையாளம் தெரியாத நபர்களால் தாரிக் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஆரங்கி நகரத்தை நன்கு கொலையாளிகள், அருகில் இருந்து பலமுறை சுட்டதில் தாரிக் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இது "குறி வைக்கப்பட்ட கொலை" என்றும், "பயங்கரவாதச் செயல்" என்றும் கராச்சி காவல்துறை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. தாரிக் கொலையில் உள்ளூர் தீவிரவாதிகளின் பங்கு மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பிற்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பாகிஸ்தானில் தொடர்ந்து கொள்ளப்படும் தீவிரவாதிகள்
இந்தியாவிற்கு எதிராக சதி வேலைகள் செய்து வந்த தீவிரவாதிகள், பாகிஸ்தானில் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். தாரிக்கின் கொலை, இந்த மாதம் முக்கிய தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு எதிராக நடந்த மூன்றாவது கொலையாகும். மேலும் இந்த ஆண்டில் நடைபெறும் எட்டாவது கொலையாகும். கடந்த வாரம் கொல்லப்பட்ட காஜி என்கிற அக்ரம் கான், லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத குழுவின் ஆட்சேர்ப்பு பிரிவைச் சார்ந்தவர். 2018-2020 வரையிலான காலகட்டத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கு வழியாக, இந்தியாவிற்கு நுழைந்த பல தீவிரவாதிகளை, காஜி மூளைச்சலவை செய்தது குறிப்பிடத்தக்கது. செப்டம்பர் மாதத்தில், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த மற்றொரு தீவிரவாதி ரியாஸ் அகமது பாகிஸ்தானின் ராவல்கோட் பகுதியில் கொல்லப்பட்டார். அவர், லஷ்கர்-இ-தொய்பாவின் பாகிஸ்தான் செயல்பாடுகள் மற்றும் ஆட்சேர்ப்பு பணிகளை கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வருடம் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள்
மே மாதத்தின் தொடக்கத்தில், காலிஸ்தான் கமாண்டோ படையைச் சேர்ந்த பரம்ஜித் சிங் பஞ்வார் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். லஷ்கர்-இ-தொய்பாவின் மௌலானா ஜியாவுர் ரஹ்மான் மற்றும் முஃப்தி கைசர் பாரூக், செப்டம்பர் மாதம் கராச்சியில் சுட்டுக் கொல்லப்பட்டார். 2016-ம் ஆண்டு பதான்கோட் விமானப்படை தளத்தில் தாக்குதல் நடத்திய, ஃபிதாயீன் படையின் தலைமை தளபதி ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி, ஷாகித் லத்தீப் அக்டோபர் மாதத்தில் கொல்லப்பட்டார். அக்டோபர் மாதத்தில், லஷ்கர்-இ-தொய்பாவின் கவஜா சாகித் கடத்தப்பட்டு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், லயன் ஆப் கண்ட்ரோல் (LoC) அருகில், தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.