காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முடக்க இருக்கிறது இஸ்ரேல்
ஹமாஸின் கட்டுப்பாட்டில் உள்ள காசா பகுதிக்கு எதிரான நடவடிக்கைகளை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது. முதறகட்டமாக, காசா பகுதிக்கு செல்லும் மின்சாரம், உணவு, தண்ணீர் மற்றும் எரிபொருளை முழுமையாக துண்டிக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இது குறித்து பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட், "மிருகத்தனமான மக்களுக்கு எதிரான போரின் ஒரு பகுதி இது" என்று தெரிவித்துள்ளார். கடந்த சனிக்கிழமை அதிகாலை, இஸ்ரேல் மீது திடீரென்று பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதல் ஆரம்பித்து 3 நாட்கள் ஆகியும், தெற்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்துக்கும், பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
காசா மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக அறிவித்த இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்புக்கு ஈரான் உள்ளிட்ட சில அரபு நாடுகள் துணை நிற்பதாக கூறப்படுகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா உளியிட்ட மேற்கத்திய நாடுகள் வெளிப்படையாக உதவி வருகின்றன. மூன்று நாட்களாக தொடரும் இந்த மோதலில் இதுவரை 1,100 பேர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலை ஒட்டி இருக்கும் காசா பகுதியில் பாலஸ்தீனிய அகதிகள் வசித்து வந்தாலும், அந்த பகுதியை ஒட்டிய எல்லைகள் மொத்தமும் இஸ்ரேல் மற்றும் எகிப்தின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்பினர் ஆட்சி செய்து வரும் காசா பகுதி முழுவதையும் முடக்க இஸ்ரேல் முடிவு செய்துள்ளது. இதற்கிடையில், இஸ்ரேல் இராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, காசா பகுதியில் இருக்கும் மக்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தெரிவித்திருந்தார். எனினும், அங்கு பயங்கரவாத நடமாட்டம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.