இஸ்ரேல் பதிலடி கொடுத்தால், இதுவரை பயன்படுத்தாத ஆயுதங்களை பயன்படுத்துவோம்: ஈரான் மிரட்டல்
நேற்று இஸ்ரேலின் இராணுவத் தலைவர், ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என்றும், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் கூறினார். இதற்கிடையில், "இஸ்ரேலின் எந்தவொரு தாக்குதலுக்கும் நொடிகளில் பதிலளிப்போம்" என்று ஈரான் தெரிவித்துள்ளது. அதோடு, தேவைப்பட்டால் இதற்கு முன் பயன்படுத்தாத ஆயுதங்களை கூட பயன்படுத்தக்கூடும் என மிரட்டல் விடுத்துள்ளது. ஏப்ரல் 13 அன்று, ஈரான் தனது பரம எதிரியான இஸ்ரேல் மீது முதல் முறையாக நேரடி தாக்குதலை நடத்தியது. 300 க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஈரான் ஏவியது. ஏப்ரல் 1 ம் தேதி அன்று சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் உள்ள தெஹ்ரானின் தூதரக கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது.
அமைச்சரவையை கூடிய இஸ்ரேல் பிரதமர்
இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் போக்கை தீர்மானிக்க கடந்த 24 மணி நேரத்திற்குள் இரண்டாவது முறையாக தனது போர் அமைச்சரவையை கூட்டி ஆலோசனை நடத்தினார். எனினும் இஸ்ரேல் அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இதற்கிடையே அமெரிக்க உயர் அதிகாரி ஸ்டீவ் ஸ்காலிஸுடனான உரையாடலில் நெதன்யாகு, "இஸ்ரேல் தன்னைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அனைத்தையும் செய்யும்" என்று கூறியதாக இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் சேனல் 12 இன் படி, போர் அமைச்சரவை அதன் கூட்டத்தில் ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு ஈரானை காயப்படுத்தும் நோக்கத்துடன், ஆனால் ஒரு முழுமையான போரை ஏற்படுத்தாமல் இருக்கும் பல வழிகளை விவாதித்ததாக கூறப்படுகிறது.
உலக நாடுகள் பலவும் போர் வேண்டாம் என அறிவுறுத்தல்
மோதலை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று இஸ்ரேல் மீது உலக நாடுகள் கடும் அழுத்தத்தை தந்து வருகிறது. அமெரிக்கா உட்பட பல நாடுகள், இஸ்ரேல் நிதானத்தைக் காட்டுமாறு வலியுறுத்தியுள்ளன. "நாங்கள் ஈரானுடன் ஒரு போரைப் பார்க்க விரும்பவில்லை. பிராந்திய மோதலை நாங்கள் பார்க்க விரும்பவில்லை," என்று வெள்ளை மாளிகை கூறியது. ஈரான் தனது இறையாண்மை மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஈரானால் சூழ்நிலையைச் சிறப்பாகக் கையாள முடியும் மற்றும் பிராந்தியத்தில் மேலும் கொந்தளிப்பைத் தவிர்க்க முடியும் என்று சீனா நம்புவதாகக் கூறியது. அதே நேரத்தில் ரஷ்யா, தனது நட்பு நாடான ஈரானை பகிரங்கமாக விமர்சிப்பதைத் தவிர்த்தது. ஆனால் இருநாடுகளுக்கு இடையேயான மோதல் அதிகரிப்பது யாருக்கும் நல்லது அல்ல என்று கூறியது.