அமெரிக்கா - ஈரான் போர் பதற்றம் தணியுமா? ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் விதித்த 7 நாட்கள் கெடு
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவுடனான மோதல்களை முடிவுக்கு கொண்டு வரவும், சர்வதேச கடல் வர்த்தகத்தின் முக்கிய பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்கவும் ஈரான் 7 நாட்கள் கொண்ட புதிய நிபந்தனைத் திட்டத்தை முன்வைத்துள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA) கூட்டத்தில் பங்கேற்றுள்ள ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராஃக்சி இந்த புதிய திட்டத்தை முன்வைத்தார். அமெரிக்கா தங்களது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், "7-வது நாளின் முடிவில் ஹார்முஸ் ஜலசந்தி திறக்கப்படும்; அணுசக்தி திட்டம் குறித்த பேச்சுகளும் மீண்டும் தொடங்கும்" என அவர் அறிவித்துள்ளார்.
நிபந்தனை
7 நாள் கெடுவும் ஈரானின் முக்கிய நிபந்தனைகளும்
கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியான் இடையே கையெழுத்தான 'இஸ்லாமாபாத் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்' அடிப்படையில் இத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு சொத்துகளை உடனடியாக அமெரிக்கா விடுவிக்க வேண்டும்; ஈரானிய கச்சா எண்ணெய் விற்பனை மீதான தடைகள் நீக்கப்பட வேண்டும் மற்றும் கடல்சார் முற்றுகைகள் கைவிடப்பட வேண்டும் மற்றும் லெபனான் மோதல்கள் உட்பட அனைத்து விதமான ராணுவ மோதல்களும் 7 நாட்களுக்குள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
பேச்சுவார்த்தை
ராஜதந்திர மட்டத்திலான பேச்சுவார்த்தைகள்
இக்கோரிக்கைகளை அமெரிக்கா பரிசீலித்து வரும் நிலையில், ஈரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராஃக்சி, அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் டிரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.
மத்திய கிழக்கில் அமைதியைத் திரும்பக் கொண்டுவர இரு நாடுகளுக்கும் இடையே இடைத்தரகர்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்து வருகின்றன.