திருமணம் குறித்து கேலி செய்ததால் விரக்தியில் அண்டை வீட்டாரை கொலை செய்த நபர்
செய்தி முன்னோட்டம்
இந்தோனேசியாவில் 45 வயது நபர் ஒருவர், தனது அண்டை வீட்டில் வசித்த 60 வயது நபரை கொலை செய்துள்ளார். கொலைக்கு அவர் கூறிய காரணம் காவல்துறைக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
கடந்த ஜூலை 29 அன்று இந்தோனேசியாவின் வடக்கு சுமத்ராவில் அமைந்துள்ள தெற்கு தபனுலி ரீஜென்சியில் இந்த சம்பவம் நடந்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொலையானவர் அஸ்கிம் இரியாண்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு ஊழியர் என்று கூறப்படுகிறது.
ஜூலை 29இல் சம்பவம் நடந்த நிலையில், அவர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனினும், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அஸ்கிம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
கொலைக்கான காரணம்
திருமணம் குறித்து விமர்சித்ததால் கொன்றதாக வாக்குமூலம்
அஸ்கிம் மற்றும் பார்லிந்துங்கன் ஆகிய இருவரும் அருகருகே வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் இடையே கோழி மற்றொருவர் வீட்டுக்குள் அடிக்கடி செல்வது குறித்து வாய்த் தகராறு இருந்து வந்துள்ளது.
பார்லிந்துங்கன் 45 வயதாகியும் திருமணம் செய்யாமல் இருந்ததை வைத்து அஸ்கிம் அடிக்கடி கேலி செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜூலை 29 அன்று இரவு 8 மணிக்கு இருவருக்கும் இடையே தகராறு முற்றி, அஸ்கிமை பார்லிந்துங்கன் கொடூரமாக தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் தாக்குதலை தடுத்து அஸ்கிமை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தாலும், அவர் உயிரிழந்துவிட்டார்.
பார்லிந்துங்கன் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தில் தான் 45 வயதாகியும் திருமணம் செய்யாதது குறித்து கேலி செய்ததால் கோபத்தில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.