ஃபிளைதுபாய் விமான பேரழிவைத் தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய சிவிலியன் விருது அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
டெல் அவீவ் நோக்கி சென்ற ஃபிளைதுபாய் விமானத்தில், சக ஓமானி பைலட்டின் கோடரித் தாக்குதலையும் மீறி 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய 'ஜனாதிபதி சிவிலியன் வீர விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ஐக்கிய அரபு அமீரக மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வரும் ஸ்மித் மச்சாரை இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோர் வெகுவாகப் பாராட்டியுள்ளனர். இஸ்ரேலின் சுதந்திர தின விழாவில் ஜோதியை ஏற்றி வைக்க பிரதமர் நெதன்யாகு, ஸ்மித் மச்சார் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தாக்குதல்
காக்பிட்டில் நடந்த தாக்குதல்
கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இஸ்ரேலின் டெல் அவீவ் நகருக்கு 174 பயணிகளுடன் பறந்த ஃபிளைதுபாய் விமானத்தின் காக்பிட்டில், ஓமன் நாட்டை சேர்ந்த சக பைலட் ஹம்மாம் அல்-ஹம்மாமி திடீரென அவசர கால கோடரியால் கேப்டன் ஸ்மித் மச்சாரைத் தாக்கினார்.
விமானத்தை கைப்பற்றி டெல் அவீவில் உள்ள கட்டடத்தின் மீது மோதி விபத்தை ஏற்படுத்த அவர் திட்டமிட்டிருந்தார்.
தாக்குதலால் விமானம் வெறும் 30 வினாடிகளில் 14,000 அடி உயரத்தில் இருந்து கீழே செங்குத்தாக சரிந்தது.
வீரம்
படுகாயத்துடன் சாதித்த இந்திய பைலட்
இரத்தம் சொட்டச் சொட்ட படுகாயமடைந்து தரையில் விழுந்த நிலையிலும், மனவுறுதியுடன் செயல்பட்ட கேப்டன் ஸ்மித் மச்சார், காக்க்பிட் கதவைத் திறந்தார்.
இதனால் உள்ளே நுழைந்த இஸ்ரேலிய பயணிகள் மற்றும் பணியாளர்கள் தாக்குதல் நடத்திய ஓமானி பைலட்டை மடக்கிப் பிடித்தனர்.
பின்னர் விமானத்தில் இருந்த மற்றொரு மாற்று பைலட் ஜோடி விமானத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, சவூதி அரேபியாவின் தபூக் நகரில் பத்திரமாகத் தரையிறக்கினர்.
இந்த வீரதீர செயலை புரிந்த பயணிகள் சிலருக்கும் சிவிலியன் விருதுகள் வழங்க போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.