வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை
வங்கதேசத்தில் மீண்டும் மோதல் வெடித்ததை அடுத்து, வங்கதேசத்தில் வசிக்கும் இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறும் அங்குள்ள இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. இன்று நடந்த கடுமையான மோதல்களில் 21 பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்தனர். இது குறித்து வங்கதேசத்தின் சில்ஹெட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அங்கு வசிக்கும் இந்திய மாணவர்கள் உட்பட அனைத்து இந்திய பிரஜைகளும் தூதரத்துடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மேலும், எச்சரிக்கையாக இருக்குமாறும், அவசரநிலைகள் ஏற்பட்டால் +88-01313076402 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அரசு வேலை இட ஒதுக்கீடு தொடர்பாக நடந்து வரும் போராட்டத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி இன்று மீண்டும் போராட்டம் தொடங்கியது.
சர்ச்சைக்குரிய இட ஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டம்
சில நாட்களுக்கு முன்பு, 1971இல் நடந்த வங்கதேச சுதந்திரப் போரில் போராடிய வீரர்களின் உறவினர்களுக்கு அரசாங்க வேலைகளில் 30 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக 200 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில், அரசை ராஜினாமா செய்யக் கோரி ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 4) நடந்த போராட்டத்தின்போது ஆளும் கட்சியினர் மற்றும் போராட்டக்காரர்கள் இடையே மோதல் வெடித்தது. வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் என்ற பெயரில் நாசவேலையில் ஈடுபடுபவர்கள் மாணவர்கள் அல்ல பயங்கரவாதிகள் என்றும், அவர்களை உறுதியான கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் பிரதமர் ஹசீனா பாதுகாப்பு படையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.