இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் எச்சரிக்கை
ஹமாஸ் மற்றும் ஹெஸ்பொல்லா அமைப்புகளின் உயர்மட்ட தலைவர்களை கொன்றதற்காக இஸ்ரேலை பழிவாங்க ஈரான் மற்றும் அதனை ஆதரிக்கும் குழுக்கள் சபதம் செய்துள்ளதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரித்துள்ளன. முன்னதாக, கடந்த சில மாதங்களாக காஸாவில் உள்ள ஹமாஸ் மீது தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், கடந்த செவ்வாயன்று (ஜூலை 30) பெய்ரூட்டில் ஹெஸ்பொல்லா தளபதி ஃபுவாட் ஷுகுரையும், தெஹ்ரானில் ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியேவையும் கொன்றது. இது ஈரான் மட்டுமல்லாது, சிரியா, லெபனான், ஈராக் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் உள்ள ஈரான் ஆதரவு பயங்கரவாத குழுக்களுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பதில் தாக்குதல் இருக்கும் என்பதால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
லெபனானில் இருந்து வெளியேற அறிவுறுத்தியது இந்திய தூதரகம்
பதற்றம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் விழிப்புடன் இருக்குமாறும், அந்நாட்டு அரசு வழங்கியுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடிக்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் அனைவரும் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளதோடு, தூதரகத்தில் பதிவு செய்யாதவர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறும் கூறியுள்ளது. முன்னதாக, வெள்ளிக்கிழமை லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள இந்திய தூதரகமும், இந்தியர்கள் யாரும் லெபனானுக்கு பயணிக்க வேண்டாம் என அறிவுறுத்தியதோடு, அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேறுமாறும் அறிவுறுத்தியது. இதற்கிடையே, ஏர் இந்தியா இஸ்ரேலின் டெல் அவிவிற்கு விமானங்களை இயக்குவதை ஆகஸ்ட் 8 வரை உடனடியாக நிறுத்தியுள்ளது.