கனடா: கோவிலுக்கு வந்த பக்தர்கள் மீது தாக்குதல், வெளியே இருந்த தூதரக முகாமும் சீர்குலைப்பு
கனடாவின் பிராம்டனில் உள்ள ஹிந்து கோவிலுக்கு வந்த காலிஸ்தான் ஆதரவாளர்கள், பக்தர்களின் மீது குச்சிகளை வைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த சம்பவத்தை கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டித்துள்ளார். மேலும் இந்த சம்பவத்தில் கோவிலுக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த இந்திய தூதரக முகாமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய தூதரக முகாமையும், கோவிலையும் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, இந்த சம்பவத்தை "இந்தியா-விரோத சக்திகளால் திட்டமிடப்பட்ட வன்முறை சீர்குலைவு" என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. வழக்கமான தூதரக நிகழ்வுகளை பாதிக்கும் இடையூறுகள் குறித்து வருத்தம் தெரிவித்த இந்திய தூதரகம், இது இந்திய குடிமக்களின் தேவையை பூர்த்தி செய்ய உள்ளூர் கூட்டாளர்களின் முழு ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறியது.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம்; தூதரகம் கவலை
விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பு குறித்து கவலையை வெளிப்படுத்திய இந்திய தூதரகம், வெளிநாட்டில் உள்ள இந்திய குடிமக்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்த இடையூறுகள் அத்தியாவசிய சேவைகளுக்கு இடையூறாக உள்ளது எனத்தெரிவித்தது. அதே நேரத்தில், ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு, அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது சமூக ஊடக பதிவில், "பிராம்டனில் உள்ள இந்து கோவிலில் நிகழ்ந்த வன்முறைச் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒவ்வொரு கனடியருக்கும் தங்கள் நம்பிக்கையை சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் கடைப்பிடிக்க உரிமை உள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விரிவான விசாரணை நடத்த வேண்டும்" என தெரிவித்துள்ளார்.