விமானத்தைக் கவிழ்க்க முயன்ற ஓமன் விமானி! உயிருக்குப் போராடியபடி சண்டை போட்ட இந்திய கேப்டன்
செய்தி முன்னோட்டம்
துபாயிலிருந்து டெல் அவீவ் சென்ற பிளைதுபாய் (flydubai) FZ1073 விமானத்தில் 180-க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிரைக் காத்து, பேரழிவைத் தடுத்த முதன்மை விமானி ஒரு இந்தியர் என்ற செய்தி வெளியாகியுள்ளது. இஸ்ரேலின் N12, சேனல் 12 மற்றும் Ynet News ஆகிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, விமானத்தைக் கவிழ்க்க முயன்ற ஓமன் நாட்டைச் சேர்ந்த இணை விமானி நடத்திய கத்திக்குத்துத் தாக்குதலில் இந்திய கேப்டன் பலத்த காயமடைந்தார். படுகாயமடைந்த நிலையிலும் இந்திய கேப்டன், தாக்குதல் நடத்திய இணை விமானியை எதிர்த்துப் போராடி, விமானம் கீழே மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுத்தார்.
விவரங்கள்
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமான பயணிகள்
காக்பிட்டில் இருந்து ரத்த வெள்ளம் மற்றும் அலறல் சத்தம் கேட்டதும், முன் வரிசையில் அமர்ந்திருந்த இஸ்ரேலிய பயணிகள் சிலர் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியவரை மடக்கிப் பிடித்தனர்.
பயணிகள் வரிசையில் சாதாரண உடையில் பயணித்த மற்ற இரு விமானிகள் உடனடியாகக் காக்க்பிட்டைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விமானத்தை சவுதி அரேபியாவின் தபூக் விமான நிலையத்தில் பத்திரமாகத் தரையிறக்கினர்.
தாக்குதலுக்கு இலக்கான இந்திய கேப்டன் ஆபத்தான நிலையில் சவுதி அரேபியாவின் தபூக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விமானத்தில் பயணித்த இஸ்ரேலிய பல் மருத்துவர் ஒருவர், அவருக்கு உடனடி முதலுதவி சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்ற உதவியதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
தொடரும் பாதுகாப்பு விசாரணை
இஸ்ரேலிய வான்வெளியில் நுழைவதற்கு அரபு மற்றும் வளைகுடா நாடுகளைச் சேர்ந்த விமானப் பணியாளர்களுக்கு கடுமையான பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்படும் நிலையில், ஓமன் நாட்டைச் சேர்ந்த இப்பயங்கரவாதிக்கு எவ்வாறு அனுமதி கிடைத்தது என்பது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு முகமைகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.
அவர் இரட்டைப் குடியுரிமை வைத்திருந்தாரா அல்லது கடந்த ஒரு ஆண்டாக மட்டுமே அந்த விமான நிறுவனத்தில் பணியாற்றி வந்தாரா என்ற கோணத்திலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.