சவுதியில் இரு முக்கிய விமான நிலையங்கள் மீது திடீர் தாக்குதல்: 3 பேர் பலி, இந்தியா கடும் கண்டனம்
செய்தி முன்னோட்டம்
சவுதி அரேபியாவில் உள்ள இரு முக்கிய சர்வதேச விமான நிலையங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 3 பேர் உயிரிழந்ததோடு, பலரும் காயமடைந்துள்ள சம்பவத்திற்கு இந்தியா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. சவுதி தலைநகரில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மற்றும் அபா சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் மீது கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. கிங் காலித் விமான நிலையத் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 8 பேர் காயமடைந்தனர். அபா விமான நிலைய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததுடன் 28 பேர் காயமடைந்தனர். குடிமக்கள் பயன்படுத்தும் உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என இந்திய வெளியுறவு அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
பதிலடி
ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி கூட்டுப்படை பதிலடி
ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் இத்தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படும் நிலையில், சவுதி தலைமையிலான கூட்டுப்படை கடுமையான பதிலடித் தாக்குதலைத் தொடங்கியுள்ளது.
ஹூதி அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள சாடா, ஹோடைடா, ஜாவ்ஃப் மற்றும் மாரிப் ஆகிய பகுதிகளில் உள்ள 80-க்கும் மேற்பட்ட ராணுவ மையங்களை இலக்காகக் கொண்டு கூட்டுப்படை வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
மேலும், ஏமனின் ஏடன் சர்வதேச விமான நிலையத்தின் மீதும் ஹூதிகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா - ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் சூழலில், செங்கடல் மற்றும் சர்வதேசக் கப்பல் போக்குவரத்துப் பாதையான பாப் எல்-மாண்டெப் ஜலசந்தி அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.