பாகிஸ்தான்: பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்த காபந்து பிரதமர்
செய்தி முன்னோட்டம்
காசா மற்றும் மேற்கு கரை மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், பாகிஸ்தான் காபந்து பிரதமர் அன்வாருல் ஹக் கக்கார், அந்நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களை ரத்து செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
கக்கார் நாட்டுக்கு ஆற்றிய சுருக்கமான உரையில், பாலஸ்தீனர்களுக்கு தோள் கொடுக்கவும், நாட்டு மக்களை நிதானத்தோடு இருக்கவும் வலியுறுத்தினார்.
"பாலஸ்தீனத்தின் தீவிரமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, நமது பாலஸ்தீன சகோதர, சகோதரிகளுக்கு தோள் கொடுக்க, புத்தாண்டுக்கான எந்தவொரு நிகழ்ச்சியையும் நடத்துவதற்கு அரசாங்கத்தால் கடுமையான தடை விதிக்கப்படுகிறது" என தெரிவித்தார்.
இஸ்ரேல் தாக்குதலில் தற்போது வரை 21,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாக பேசிய காபந்து பிரதமர், இத்தாக்குதல் வன்முறை மற்றும் அநீதியின் அனைத்து எல்லைகளையும் கடந்து விட்டதாக பேசினார்.
2nd card
"பாலஸ்தீனர்களுக்காக பாகிஸ்தானும் இஸ்லாமிய உலகமும் வேதனையில் உள்ளது"
காசா மற்றும் மேற்கு கரையில், ஆயுதம் இல்லாத அப்பாவி பாலஸ்தீன குழந்தைகள் மற்றும் பெண்கள் கொல்லப்படுவதால், முழு பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய உலகமும், மிகுந்த வேதனையில் உள்ளதாக அவர் பேசினார்.
பாலஸ்தீனத்திற்கு ஏற்கனவே இரண்டு உதவி தொகுப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது தொகுப்பு தயார் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்த கக்கார்,
அவரின் நாடு காயமடைந்தவர்களை மீட்பதற்காகவும், உதவிகளை வழங்குவதற்காகவும், எகிப்து மற்றும் ஜோடானுடன் தொடர்ந்து பேசிவருவதாக தெரிவித்தார்.
இஸ்லாமிய அமைப்புகள் பல்வேறு வழிகளில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால், பாகிஸ்தானில் வழக்கமாக புத்தாண்டு கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது.