ஈரான்-இஸ்ரேல் போர்: அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என ஐ.நா கவலை
சிரியாவில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது சமீபத்தில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. அந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதல் நடத்திய ஈரான், இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி நேரடி தாக்குதலை நடத்தியது. இந்நிலையில், ஈரானுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இஸ்ரேல் கூறியுள்ளது. அதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதட்டம் அதிகரித்துள்ளது. பிற நாடுகளும் இந்த போரில் பங்கு பெறலாம் என்ற அச்சமும் எழுந்துள்ளது. மேலும், ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என ஐக்கிய நாடுகளின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
பதட்டங்களைத் தணிக்க அழைப்பு விடுத்தார் ஐநா பொதுச்செயலாளர்
"இந்த சாத்தியம் குறித்து நாங்கள் எப்போதும் கவலைப்படுகிறோம்" என்று IAEA டைரக்டர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி கூறியுள்ளார். ஈரானிய தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுக்கும் என அந்நாட்டு ராணுவ தலைமை அதிகாரி கூறியதால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது போர் அமைச்சரவையை நேற்று மாலை சந்தித்தார். ஈரானிய தாக்குதலைத் தொடர்ந்து, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு அவசரக் கூட்டத்தை நடத்தியது. அந்த கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மத்திய கிழக்கு "போரின் விளிம்பில்" இருப்பதாக எச்சரித்தார். மேலும், பதட்டங்களைத் தணிக்க அவர் அழைப்பு விடுத்தார்.