அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கானுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது
அல்-காதர் அறக்கட்டளை வழக்கில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் இன்று(மே 12) இரண்டு வார ஜாமீன் வழங்கியது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் மூன்று பேர் கொண்ட அமர்வு, இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து கான் கைது செய்யப்பட்ட விதம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தியது. மேலும், இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, இம்ரான் கான் நேற்று விடுவிக்கப்பட்டார்.
அரசாங்கம் சுமார் 3000 பேரை கைது செய்தது
இந்நிலையில், தற்போது இதே வழக்கிற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் அவருக்கு இரண்டு வார ஜாமீன் வழங்கியுள்ளது. இன்று பாதுகாப்பு காரணங்களுக்காக விசாரணை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தாமதமானது. இம்ரான் கான் கைது செய்யப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன. இந்த போராட்டங்களின் போது, வாகனங்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் எரிக்கப்பட்டு, கடைகள் சூறையாடப்பட்டன. இதனையடுத்து, அரசாங்கம் சுமார் 3000 பேரை கைது செய்தது. இந்த வன்முறைகளால் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர். டஜன் கணக்கான எதிர்ப்பாளர்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.