Page Loader
இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்
உத்தரவிடப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் இம்ரான் கான் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

இம்ரான் கான் விடுவிப்பு: என்ன நடக்கிறது பாகிஸ்தானில்

எழுதியவர் Sindhuja SM
May 12, 2023
10:02 am

செய்தி முன்னோட்டம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார். இந்த கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள் இம்ரான் கானை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நேற்று(மே-11) உத்தரவிட்டனர். உத்தரவிடப்பட்ட ஒரு மணிநேரத்திற்குள் இம்ரான் கான் உச்ச நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அவர் 15 வாகனங்கள் கொண்ட தொடரணியில் அழைத்து வரப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தான் கடத்திச் செல்லப்பட்டதாகவும், அதற்கு பிறகு தன் மீது தடியடி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கான் நீதிமன்றத்தில் கூறினார்.

details

போராட்டக்காரர்கள் வன்முறையை தவிர்க்க வேண்டும்: ஐநா 

தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதி முகமது அலி-மசார் மற்றும் நீதிபதி அதர்-மினல்லா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு, இஸ்லாமாபாத் உயர் திமன்ற வளாகத்தில் இருந்து கான் கைது செய்யப்பட்ட விதம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தியது. நீதிமன்ற வளாகத்தில் இருந்து கான் கைது செய்யப்பட்டது நாட்டின் நீதித்துறைக்கு ஏற்பட்ட அவமானம் என்று நீதிபதி பண்டியல் கூறினார். மேலும், இம்ரான் கானின் கைது சட்டவிரோதமானது என்று நீதிபதிகள் கூறினர். இதனையடுத்து, இம்ரான் கான் விடுவிக்கப்பட்டார். இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு இன்னும் அமலில் உள்ளது. எனினும், இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப்(PTI) கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தானின் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அமெரிக்காவின் பைடன் அரசாங்கம் தெரிவித்துள்ளது.