"நீதிமன்ற அவமதிப்பு": இம்ரான் கான் கைது குறித்து பேசிய பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
நீதிமன்றப் பதிவாளரின் அனுமதியின்றி நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து இம்ரான் கானைக் கைது செய்தது "நீதிமன்ற அவமதிப்பாக" கருதப்படுகிறது என்று பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கானை ஒரு மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்துமாறு ஊழல் தடுப்புக் குழுவுக்கு பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் இன்று(மே 11) உத்தரவிட்டது. அல்-காதர் அறக்கட்டளை வழக்கில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து இம்ரான் கான் தொடுத்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இந்த உத்தரவை பிறப்பித்தனர். பாகிஸ்தான் தலைமை நீதிபதி உமர் அதா பண்டியல், நீதிபதி முகமது அலி மசார் மற்றும் நீதிபதி அதர் மினல்லா ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட அமர்வு இன்று அவரது மனுவை விசாரித்தது.
கைது செய்வதற்கு முன் நீதிமன்ற பதிவாளரிடம் அனுமதி பெற்றிருக்க வேண்டும்: தலைமை நீதிபதி
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் வழக்கு விசாரணைக்காக மே 9ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்திற்கு சென்றிருந்த போது பாராமிலிரே ரேஞ்சர்களால் நீதிமன்ற வளாகத்திற்குள் வைத்து கைது செய்யப்பட்டார். இது குறித்து விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவர் கைது செய்யப்பட்ட விதம் குறித்து கோபத்தை வெளிப்படுத்தி உள்ளது. "90 பேர் நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்தால், நீதிமன்றத்திற்கு என்ன மரியாதை இருக்கிறது? நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஒரு நபரை எப்படி கைது செய்ய முடியும்?" என்று கேள்வி எழுப்பிய பாகிஸ்தான் தலைமை நீதிபதி, தேசிய பொறுப்புக்கூறல் பணியகம்(NAB) "நீதிமன்ற அவமதிப்பு" செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், இம்ரான் கானை மாலை 4:30 மணிக்குள்(உள்ளூர் நேரம்) ஆஜர்படுத்தும்படி NAB-க்கு உத்தரவிடபட்டுள்ளது.