முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கைது
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், துணை ராணுவப் படையினரால் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இஸ்லாமாபாத்தில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் வைத்து, ஊழல் வழக்கு தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகிறது. "இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் ரேஞ்சர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இம்ரான் கானின் கார் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது" என்று இம்ரான் கானின் உதவியாளரும் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்(PTI) தலைவருமான ஃபவாத் சவுத்ரி உருது மொழியில் ட்வீட் செய்துள்ளார். "இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் வைத்து ரேஞ்சர்கள் இம்ரான் கானைக் கடத்தத்தினர். பாகிஸ்தான் முழுவதும் போராட்டங்களை உடனடியாக தொடங்குமாறு கட்சி அழைப்பு விடுத்துள்ளது" என PTI தலைவர் அசார் மஷ்வானி ட்வீட் செய்துள்ளார்.
எந்த வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டார்: தலைமை நீதிபதி கேள்வி
இந்நிலையில், தேசிய தலைநகர் இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த கைது நடவடிக்கை பற்றி விசாரித்த IHC தலைமை நீதிபதி அமீர் ஃபரூக், இஸ்லாமாபாத் காவல்துறையை கடுமையாக சாடினார். மேலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். இஸ்லாமாபாத் காவல்துறைத் தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்றால் பிரதமருக்கு "அழைப்பு விடுப்பேன்" என்றும் நீதிபதி எச்சரித்துள்ளார். "நீதிமன்றத்திற்கு வந்து இம்ரான் ஏன் கைது செய்யப்பட்டார், எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்று எங்களிடம் சொல்லுங்கள்" என்று நீதிபதி ஃபரூக் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னைக் கொலை செய்வதற்கு இராணுவம் முயற்சிப்பதாக இம்ரான் கான் குற்றம்சாட்டி வந்த நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.