Loading...
ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு: மியான்மர் குற்றவாளி என அறிவிப்பு
ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை நிகழ்த்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது

ரோஹிங்கியா இனப்படுகொலை வழக்கில் சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு: மியான்மர் குற்றவாளி என அறிவிப்பு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 19, 2026
06:24 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வடக்கு ரக்கைன் மாகாணத்தில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையின் போது, ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக மியான்மர் இனப்படுகொலை நிகழ்த்தியது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது. நாஜி ஜெர்மனியின் யூதப் படுகொலைகளுக்கு பிறகு, சர்வதேச நீதிமன்றம் ஒன்றால் இனப்படுகொலை நடந்ததாக உறுதி செய்யப்படும் நான்காவது நிகழ்வு இதுவாகும். மேலும், ஒரு தனிநபரைத் தாண்டி ஒரு நாடே இனப்படுகொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்படுவது வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

நீதிபதிகள் அமர்வு

"சுமார் 10,000 ரோஹிங்கியா மக்கள் கொல்லப்பட்டனர்"

சர்வதேச நீதிமன்றத்தின் தலைவர் யூஜி இவாசாவா வாசித்த தீர்ப்பில், 15 நீதிபதிகள் கொண்ட அமர்வு மியான்மர் பாதுகாப்புப்படைகளின் கொடூரங்களை பட்டியலிட்டுள்ளது.

இலக்கு வைக்கப்பட்ட 8,15,000 ரோஹிங்கியா மக்களில் சுமார் 10,000 அப்பாவி பொதுமக்களை மியான்மர் பாதுகாப்புப் படைகள் கொன்று குவித்துள்ளன.

அனைத்து ஆதாரங்களையும் ஆராய்ந்ததில், வடக்கு ரக்கைன் மாகாணத்தில் உள்ள ரோஹிங்கியா இனத்தின் கணிசமான பகுதியை அழிக்கும் நோக்கத்துடனேயே மியான்மர் செயல்பட்டுள்ளது தெளிவாகிறது என நீதிமன்றம் கூறியுள்ளது.

சிறுபான்மை முஸ்லிம் பெண்களுக்கு எதிராக பரவலான பாலியல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டதாகவும், அவர்களின் இனப்பெருக்கத் திறனை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிதைக்கும் நோக்கத்துடன் இவை நடத்தப்பட்டதாகவும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வங்கதேசத்திற்கு தப்பிச்சென்ற மக்கள் மீதும் ராணுவம் தாக்குதல் நடத்தியதை நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

வழக்கின் பின்னணி

காசா (இஸ்ரேல்) & உக்ரைன் வழக்குகளிலும் எதிரொலிக்கும்!

இனப்படுகொலைக்கான நோக்கத்தை சர்வதேச நீதிமன்றம் எவ்வாறு வரையறுத்துள்ளது என்பது, காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை நடத்துவதாக தென்னாப்பிரிக்கா தொடர்ந்துள்ள வழக்கு மற்றும் உக்ரைன் - ரஷ்யா இடையிலான வழக்கிலும் மிக முக்கிய சட்ட முன்னுதாரணமாக பார்க்கப்படுகிறது.

சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டப்படி கட்டுப்படுத்தக்கூடியது என்றாலும், அதனை நேரடியாக அமல்படுத்த நீதிமன்றத்திற்கு தனிப் படைகளோ அமைப்போ இல்லை.

மியான்மர் இத்தீர்ப்பை மதிக்க தவறினால், ஐ.நா. சாசனத்தின் பிரிவு 94(2)-ன் கீழ் காம்பியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை அணுகலாம்.

ஆனால், பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு Veto அதிகாரம் இருப்பதால், பொருளாதாரத் தடைகள் விதிப்பதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன.

ADVERTISEMENT