செங்கடலில் சரக்குக் கப்பல்கள் மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்: அமெரிக்க ராணுவம்
செங்கடலில் பாப் எல்-மண்டேப் ஜலசந்திக்கு அருகில், லெபனானின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்கள் வர்த்தக கப்பல்கள் மீது இரண்டு ஏவுகணைகள் மூலம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. முன்னதாக, எரித்திரியா மற்றும் ஏமன் கடற்கரைகளுக்கு இடையே பயணம் செய்து கொண்டிருந்த சரக்குக் கப்பலுக்கு அருகே தாக்குதல் நடைபெற்றதாக இங்கிலாந்து தெரிவித்திருந்தது. மேலும், கப்பல் மற்றும் பணியாளர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்நாடு கூறியுள்ளது. அமெரிக்க ராணுவமும், இதை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. நவம்பர் 19ஆம் தேதியிலிருந்து, வர்த்தக கப்பல்கள் மீதான ஹூதி கிளர்ச்சியாளர்களின் 24வது தாக்குதல் இது என அமெரிக்க ராணுவத்தின், மத்திய கட்டளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளது.
ஹூதி தாக்குதல் குறித்த அமெரிக்க மத்திய கட்டளையின் ட்விட்
செங்கடல் விவகாரத்தை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் எழுப்ப பிரான்ஸ் திட்டம்
சர்வதேச அமைதி, பாதுகாப்பை பேணுவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில், செங்கடல் விவகாரத்தை எழுப்பப்படும் என பிரான்ஸ் தெரிவித்துள்ளது. அக்டோபர் 7ல் தொடங்கிய இஸ்ரேல்- பாலஸ்தீன போரில், ஹமாஸ் ஆயுதக் குழுவிற்கு ஆதரவாக, செங்கடலில் பயணிக்கும் வர்த்தக கப்பல்களை ஹூதி கிளர்ச்சியாளர்கள் தொடர்ந்து தாக்கி வருகின்றனர். அண்மை நாட்களாக அதிகப்படியான ஆளில்லா விமானங்கள், கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் ஹூதிகள் கப்பல்களை தாக்குகின்றனர். இதை அப்பகுதியில் ரோந்து பணியில் உள்ள, பிரிட்டிஷ், பிரான்ஸ், அமெரிக்க கப்பல்கள் சுட்டு வீழ்த்தி வருகின்றன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, சிறிய படகுகளில் வந்து வர்த்தக கப்பலை தகர்க்க ஹூதிகள் முற்பட்டனர். அப்போது அமெரிக்க ராணுவம் தடுத்து, 10 ஹூதி வீரர்களை கொன்றது குறிப்பிடத்தக்கது.