இஸ்ரேல் போர்: மேலும் இரு பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
ஹமாஸ் அமைப்பு பிடித்து வைத்திருந்த மேலும் இரண்டு பிணையக் கைதிகளை விடுவித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. தற்போது விடுவிக்கப்பட்டுள்ள நூரிட் கூப்பர் மற்றும் யோச்செவ்ட் லிஃப்ஷிட்ஸ், அக்டோபர் 7 ஆம் தேதி, காசா எல்லைக்கு அருகில் உள்ள சிறிய கிராமத்தில் இருந்து கடத்தப்பட்டனர். "அவர்கள் இஸ்ரேல் பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் மருத்துவமனை கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு அவர்கள் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்" என இஸ்ரேல் பிரதமர் அலுவலக செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். கடத்தப்பட்ட கூப்பர், 79, லிஃப்ஷிட்ஸ், 85, ஆகிய இருவரும் தங்களது கணவர்களுடன் கடத்தப்பட்டனர். அவர்களது கணவர்களை ஹமாஸ் விடுதலை செய்யவில்லை.
ஹமாஸ் பிடித்து வைத்துள்ள பிணைய கைதிகள் குறித்து நாம் அறிந்தவை
கடந்த அக்டோபர் 7 ஆம் தேதி, இஸ்ரேலுக்குள் தரை வழியாக ஊடுருவிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர், 222 பேரை பிணைய கைதிகளாக பிடித்து சென்றதாக இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தெரிவிக்கின்றனர். ஹமாஸ் பிணையக் கைதிகளாக பிடித்து சென்றவர்களில் முதியவர்கள், குழந்தைகள், வீரர்கள் உள்ளிட்ட பலர் இருக்கலாம் என நம்பப்படுகிறது மேலும், கடத்தப்பட்டதற்கு பின், கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்காவைச் சேர்ந்த ஜூடித் ராணன் மற்றும் அவரது மகள் நடாலி ஆகிய இரு பிணைய கைதிகளை, ஹமாஸ் விடுவித்தது குறிப்பிடத்தக்கது. கடத்தப்பட்டவர்களை 'பாதுகாப்பான இடங்கள்' மற்றும் 'சுரங்கங்களில்' வைத்திருப்பதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.