இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்த, 'வீரமான' பாகிஸ்தானிடம் உதவி கோரும் முக்கிய ஹமாஸ் தலைவர்
ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்களுள் ஒருவரான இஸ்மாயில் ஹனியே, காசாவில் இஸ்ரேல் தாக்குதலை தடுக்க, "வீரமான" பாகிஸ்தானிடம் உதவி கோரியுள்ளதாக, அந்நாட்டின் ஜியோ செய்திகள் தெரிவித்துள்ளது. இது குறித்து ஜியோ செய்திகள் நேற்று வெளியிட்டிருந்த செய்தியில், இஸ்லாமாபாத்தில் மஜ்லிஸ் இத்தேஹாத்-இ-உம்மா பாகிஸ்தான் ஏற்பாடு செய்த, 'அல்-அக்ஸா மசூதியின் புனிதம் மற்றும் முஸ்லிம் உம்மத்தின் பொறுப்பு' என்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய இஸ்மாயில், "பாகிஸ்தானின் எதிர்ப்பை இஸ்ரேல் எதிர்கொண்டால், காசாவில் நடைபெறும் கொடுமையை நிறுத்தலாம்" எனவும், "பாகிஸ்தானை "துணிச்சலான மற்றும் முஜாஹிதீன்கள் அல்லது இஸ்லாத்திற்காக போராடும் மக்களின் நிலம்" எனவும் அவர் கூறியதாக அச்செய்தி கூறுகிறது.
அக்டோபர் 7 தாக்குதலை நியாயப்படுத்தும் இஸ்மாயில்
இஸ்மாயில், அந்தக் கூட்டத்தில் திரண்டு இருந்தவர்களிடம் இஸ்ரேலிய எதிர்ப்பு பற்றியும் பேசினார். இஸ்ரேல் 16,000 பாலஸ்தீனியர்களை கைது செய்து, இஸ்லாமிய புனித தலங்களை அவமதித்தது. இது சர்வதேச விதிமுறைகளை மீறுவதாக அவர் கூறினார். இஸ்லாமிய நாடுகள் இஸ்ரேலுடன் உறவு வைத்துக் கொள்வதை கடுமையாக எச்சரித்த இஸ்மாயில், அது பாலஸ்தீனத்தின் நோக்கத்தை கடுமையாக பாதிக்கும் எனவும் தெரிவித்தார். மேலும், அக்டோபர் 7ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலை தற்காப்பு என நியாயப்படுத்திய இஸ்மாயில், "நிரந்தர அழிவை" நோக்கமாகக் கொண்டு இஸ்ரேல், காசா மீது திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்ததாகவும் பேசி உள்ளார். பாகிஸ்தான் மீது பாலஸ்தீனர்களுக்கு அதிகப்படியான நம்பிக்கை உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.